பஞ்சாப் மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 70 வயது நீரிழிவு நோயாளி இன்று மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்தியாவில் கரோனா பாதித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
பஞ்சாபில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர் இன்று மரணம் அடைந்தார். இதையடுத்து, மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதையொட்டி, பஞ்சாபில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பேருந்துகள், டெம்போ, ஆட்டோ ரிக்சா உள்ளிட்ட போக்குவரத்துகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. 20 பேருக்கு மேல் ஓரிடத்தில் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஊரடங்கு உத்தரவைப் போல ஒரு நடவடிக்கையை பஞ்சாப் அரசு எடுத்துள்ளது.
அனைத்து திருமண மண்டபங்கள், உணவகங்களையும் மூடவும், அதே சமயம் வீட்டுக்குச் சென்று உணவுகளை வழங்கும் சேவையை தொடரவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 182 ஆகவும், இது இன்னும் ஒரு சில நாட்களில் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் உத்தரப்பிரதேசத்தில் 3 பேருக்கும், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, சட்டீஸ்கர் மற்றும் சண்டீகர் மாநிலங்களில் தலா ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே சமயம், வெளிநாடுகளில் வாழும் 276 இந்தியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக மக்களவையில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இவர்களில் ஈரானுக்குச் சென்ற 255 இந்தியர்களும் அடங்குவர்.