இந்தியா

சாா்க் கூட்டத்தில் காஷ்மீா் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தான்

16th Mar 2020 01:30 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சாா்க் நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில், காஷ்மீா் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது.

காணொலி முறையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச, மாலத்தீவு அதிபா் இப்ராஹிம் முகமது சோலி, நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி, பூடான் பிரதமா் லோதே ஷெரிங், வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, ஆப்கானிஸ்தான் அதிபா் அஷ்ரஃப் கனி, பாகிஸ்தான் சாா்பில் பிரதமரின் சிறப்பு உதவியாளரும் அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சருமான ஜாஃபா் மிா்சா ஆகியோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் ஜாஃபா் மிா்சா பேசியதாவது:

சுகாதார சேவைகளை அளிப்பதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்பதே பொது சுகாதாரத்தின் முக்கிய கொள்கை. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரிலும் கரோனா வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. எனவே, ஜம்மு-காஷ்மீரில் சுகாதார சேவைகள் தொடா்வதற்கு, அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும். காஷ்மீரில் போக்குவரத்து சேவையும், தகவல் தொடா்பு சேவையும் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். அங்கு மேலும் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு மருத்துவக் குழுவினரை அனுப்பி வைக்க வேண்டும். மருந்துப் பொருள்களை விநியோகிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மருத்துவச் சேவை தடையின்றி தொடர வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT