இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

13th Mar 2020 04:41 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆகியவற்றை 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

இதன் மூலம், 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலனடைய உள்ளனர்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் ஆகியவற்றை 4% உயர்த்தும் முடிவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 
விலைவாசி உயர்வைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம், ஓய்வூதியதாரர்கள் பெற்று வரும் ஓய்வூதியத் தொகை ஆகியவற்றில் 17 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் ஆகியவை தற்போது 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. 

இது தொடர்பாக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அகவிலைப்படியை 4 சதவீத அளவில் மத்திய அரசு உயர்த்தியுள்ளது என்று தெரிவித்தார். அகவிலைப்படி, அகவிலை நிவாரணம் உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.14,595 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்று அவர் கூறினார்.

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 5% அளவுக்கு அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியதால், 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்ந்தது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இருமுறை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : DA
ADVERTISEMENT
ADVERTISEMENT