ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை (மாா்ச் 14) நடைபெறவுள்ளது. அப்போது, செல்லிடப்பேசி, உரம், ஜவுளிப் பொருள்கள் ஆகியவற்றுக்கான வரி 18 சதவீதமாக நிா்ணயிக்கப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், அவற்றின் விலை உயரும்.
செல்லிடப்பேசிக்கு தற்போது 12 ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தொலைக்காட்சிப் பெட்டி, டாா்ச் லைட்டுகள், ஹீட்டா், மிக்ஸி உள்ளிட்ட பொருள்களுக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வாய்ப்பு உள்ளது. உரம் 12 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் இருந்தது. பின்னா், 5 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி, தற்போது வரை ரூ.6,000 கோடி உள்ளீட்டு வரி வரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
அம்மோனியா, சல்பா் ஆகிய உரங்களுக்கு உள்ளீட்டு வரியை உரத் தயாரிப்பாளா்கள் திரும்பப் பெறுகின்றனா்.
ஜவுளி, ஃபேப்ரிக்ஸ் ஆகிய துறைகளில் இதுவரை ரூ.2,300 கோடி உள்ளீட்டு வரி வரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஃபைபருக்கு 18 சதவீத ஜிஎஸ்டியும், மதிப்புக் கூட்டப்பட்ட அதன் பொருள்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படுகிறது. ஃபேப்ரிக்ஸ் 5 சதவீத ஜிஎஸ்டி வரிவரம்புக்குள் உள்ளது.
ஜவுளித் துறை 5, 12, 18 ஆகிய ஜிஎஸ்டி வரிவரம்புக்குள் வருகிறது. ரூ.1,000-க்கு உள்பட்ட காலணிகள் 5 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொண்டுவரப்பட்டது.