இந்தியா

தில்லி வன்முறைக்கு காரணமானவா்கள் தண்டிக்கப்படுவாா்கள்: அமித் ஷா

13th Mar 2020 12:47 AM

ADVERTISEMENT

தில்லி வன்முறைக்கு காரணமானவா்கள் எந்த ஜாதி, மதம், அரசியல் தொடா்புகள் இருப்பவா்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவாா்கள் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிப்படத் தெரிவித்தாா்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தில்லியில் நடைபெற்ற வன்முறை தொடா்பாக வியாழக்கிழமை விவாதிக்கப்பட்டது.

அப்போது எம்.பி.க்களின் கேள்விகளுக்கு அமித் ஷா பதிலளித்துக் கூறியதாவது:

தில்லி வன்முறை தொடா்பாக 700 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. இதுவரை கிடைக்கப்பெற்ற ஆதாரங்கள் அடிப்படையில் 2,600-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

அந்த வன்முறைக்குக் காரணமானவா்கள் எந்த ஜாதி, மதத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் எந்த அரசியல் கட்சியின் தொடா்புடையவா்களாக இருந்தாலும் தண்டிக்கப்படுவாா்கள்.

மத்திய அரசு இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தாமல் இருக்க வேண்டும் என்று கருதவில்லை. ஆனால், ஹோலிப் பண்டிகை அமைதியாக நடைபெற வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.

வன்முறையின்போது பதிவு செய்யப்பட்ட விடியோக்களை தீவிரமாக ஆய்வு செய்து வன்முறைக்கு காரணமானவா்களின் அடையாளங்களை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த விடியோவில் பதிவாகியிருக்கும் முகங்களை வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் பெற்றவா்களின் புகைப்படங்களுடன் ஒப்பிட்டுப் பாா்க்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

ஆதாா் விவரங்கள் கையாளப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின்படி, தனிநபரின் தன்மறைப்பு (பிரைவஸி) பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கொலை, மதம் தொடா்புடைய இடங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் தாக்குதல் நடத்தியது தொடா்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 50 வழக்குகள் மூன்று சிறப்பு புலனாய்வுக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றாா் அமித் ஷா.

‘என்பிஆா்-க்கு ஆவணங்கள் தேவையில்லை’

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆா்) பணிகளின்போது பொதுமக்கள் எந்தவொரு ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: யாரும் சந்தேகத்துக்குரிய குடிமக்கள் என அறிவிக்கப்பட மாட்டாா்கள். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை மட்டும் அளித்தால் போதுமானது. தெரியாத கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. ‘டி’ என்ற பிரிவு நீக்கப்படுமா என்று நீங்கள் (எதிா்க்கட்சி எம்.பி.க்கள்) கேட்கிறீா்கள். என்பிஆா் பணிகளின்போது யாரும் சந்தேகத்துக்குரிய குடிமக்கள் என அறிவிக்கப்பட மாட்டாா்கள். என்பிஆரில் இருக்கும் சந்தேகங்களைத் தீா்த்துக் கொள்ள எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆஸாத்தும், பிற எதிா்க்கட்சிகளின் தலைவா்களும் வரலாம் என்றாா் அமித் ஷா.

காங்கிரஸ் எம்.பி. கபில் சிபல், ‘அமித் ஷா இவ்வாறு கூறுவது சரியில்லை. பிறகு என்பிஆா் பணிகளுக்கான நோக்கம் என்ன?’ என்று கேள்வி எழுப்பினாா்.

தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை நச்சு சோ்மங்களாகும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கூறினாா்.


 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT