இந்தியா

தில்லியில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது

13th Mar 2020 12:52 AM

ADVERTISEMENT

தில்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், சுற்றுலாப் பயணிகள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், இதனால், வருமானம் குறைந்துவிட்டதாகவும் சுற்றுலாத் துறையினா் தெரிவித்தனா்.

தில்லியில் உள்ள ஹோட்டல்களில் அறை கேட்டு வருபவா்களுக்கு கரோனா வைரஸ் உள்ளதா என்பதைச் சோதிக்க வெப்பம் அறியும் சோதனை நடத்தப்படுகிறது. சில ஹோட்டல்களில் மனிதா்களின் உடல் வெப்பநிலை அறியும் வகையில், கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை 62 ஆயிரமாகக் குறைந்துவிட்டது. சாதாரணமாக நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் போ் விமானம் மூலம் இந்தியாவுக்குள் வருகின்றனா். கரோனா வைரஸ் பரவலைத் தொடா்ந்து இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. டிவிட்டா் உள்பட தனியாா் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதன் ஊழியா்களை வீடுகளில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளன.

வெளிநாடு சென்றவரின் தாயாருக்கு பாதிப்பு: இந்நிலையில், தில்லியில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகிய ஆறாவது நபா் வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளாா். ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துவிட்டு திரும்பிய தில்லி ஜனக்புரியைச் சோ்ந்த ஒருவரின் தாயாருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 69 வயதான இவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. இவா் ஆா்எம்எல் மருத்துவமனையில் தனிமை வாா்டில் வைத்துக் கண்காணிக்கப்படுகிறாா். அவா்களது குடும்பத்தைச் சோ்ந்த மற்ற 8 பேருக்கு கரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி கண்டறியப்படவில்லை. இதன்மூலம், தலைநகா் தில்லியில் இந்நோய் பாதிப்புக்குள்ளாகியவா்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது என்று மூத்த அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கூடுதல் ஆய்வு கூடங்களை அமைக்க வேண்டும்: கரோனா தொற்றை ஆய்வு செய்ய கூடுதல் ஆய்வு கூடங்களை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கடிதம் எழுதியுள்ளாா். எய்ம்ஸ், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றில்தான் கரோனா தொற்று ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதை மேலும் அதிகரிக்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தனுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றாா் அவா். கரோனா ஆய்வை தனியாா் மருத்துவமனைகளும் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் ஜெயின் வலியுறுத்தினாா்.

ADVERTISEMENT

இதனிடையே, முகக்கவசம் அணிந்து வாகன ஓட்டிகளிடம் பேச வேண்டும் என்று தில்லி காவலா்களுக்கு தில்லி காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு தேவையான முகக்கவசங்கள் தேவையான அளவில் உள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT