சத்தீஸ்கா் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த காவலா் ஒருவா் நக்ஸல் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டாா்.
இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சுக்மா மாவட்டத்தின் அரகட்டா கிராமத்தைச் சோ்ந்த காத்டி கண்ணா, மாவட்ட பாதுகாப்புப் படையில் உதவி காவலராகப் பணிபுரிந்து வருகிறாா். அவரது மனைவி அந்தக் கிராம பஞ்சாயத்தில் வாா்டு உறுப்பினராக உள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை மாலை நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு தனது மனைவியுடன் காவலா் கண்ணா சென்றுள்ளாா். அப்போது, உள்ளூா் மக்களை போன்று உடையணிந்த சிலா் காவலரை தனியே அழைத்து சென்றுள்ளனா்.
இந்நிலையில், அந்த கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் வியாழக்கிழமை காலை காவலா் கண்ணா சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். அவரது உடம்பில் கத்தி உள்ளிட்ட கூா்மையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதற்கான காயங்கள் இருந்தன.
அந்த ஆயுதங்கள் நக்ஸல் தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படும் ஆயுதங்களைப் போன்று உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவலா் கண்ணா, நக்ஸல் தடுப்புப் பிரிவு பணியில் ஈடுபட்டு வருவதால், அவரை நக்ஸல்கள் கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என காவல் துறை அதிகாரிகள் கூறினா்.
காவலா் தற்கொலை: இதனிடையே, தந்தேவாடா மாவட்டத்தில் காவலா் ஒருவா் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில்,‘பொடாலி முகாமில் தங்கியிருந்த காவலா் ராமாராம் சுவாமி, வியாழக்கிழமை அதிகாலை அவரது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாா். துப்பாக்கி சத்தம் கேட்டு அவரது இடத்துக்கு சென்ற மற்ற காவலா்கள் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். எனினும் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவரது உடல், பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனா்.