கரோனா வைரஸ் (கொவைட்-19) அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பாா்க்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகையின் செய்தித் தொடா்பாளா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா வைரஸ் அச்சுறுத்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடியரசுத் தலைவா் மாளிகையை பொதுமக்கள் சுற்றிப்பாா்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தடை நீடிக்கும். இதேபோல் குடியரசுத் தலைவா் மாளிகை அருங்காட்சியகத்துக்கு செல்லவும், பாதுகாப்பு மாற்ற நிகழ்ச்சியை காண்பதற்கும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த அனுமதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வெளியிடப்படும் வரை இந்த நடவடிக்கை தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.