இந்தியா

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை: மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்

13th Mar 2020 02:32 AM |  நமது நிருபர்

ADVERTISEMENT

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்திரம் தலைமையில் வந்திருந்த கன்னியாகுமரி கோட்டாறு மறைமாவட்டக் குழுவினர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
 நாடாளுமன்ற வளாகத்தில் அமைச்சர் ஜெய்சங்கரையும், இணையமைச்சர் முரளிதரனையும் இக்குழுவினர் வியாழக்கிழமை சந்தித்தனர். அப்போது, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனிருந்தனர். பின்னர் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 592 மீனவர்கள் ஈரான் நாட்டில் தொழில் செய்வதற்காக சென்றிருந்தனர். அங்கு தற்போது கரோனா வைரஸ் தாக்கப்பட்டுள்ளதால், அவர்கள் நாடு திரும்ப முடியாமல் மூன்று தீவுகளில் தங்கியுள்ளனர். அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்திருந்தார்.
 இதையொட்டி, மீனவர்களது கிராமத்தைச் சேர்ந்த பாதிரியார்கள் குழுவினர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்து பேச வந்தோம்.
 இந்தியா திரும்ப இயலாமல் இருக்கும் தமிழக மீனவர்களைப் பத்திரமாக மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரிக்கை வைத்தோம். ஈரானில் உள்ள மீனவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார் என்றார் தளவாய் சுந்தரம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT