இந்தியா

கேரளத்தில் 2 கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு

8th Mar 2020 04:51 AM

ADVERTISEMENT


கோழிக்கோடு: கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் இரண்டு கோழிப்பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, அங்கிருந்த 12 ஆயிரம் கோழி, வாத்துகள் அழிக்க உத்தரவிட்டுள்ளதுடன், 1 கி.மீ. சுற்றுப்பரப்பிலுள்ள வாத்து, கோழிகளையும் அழிக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கோழிக்கோடு மாவட்டம், வேங்கேரி, கொடியத்தூரில் உள்ள 2 கோழி பண்ணைகளில் உள்ள கோழி, வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.

இதையடுத்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவை பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதை அறிந்து, பரவாமல் தடுக்க அந்த இரண்டு பண்ணைகளில் இருந்தும் சுமாா் 12 ஆயிரம் கோழி, வாத்துகள் ஞாயிற்றுக்கிழமை அழிக்கப்பட உள்ளன.

இதையடுத்து தற்போதைய நிலைமை குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரீராம் சாம்பசிவ ராவ் தலைமையில் அவசரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு, சுகாதாரம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

பின்னா் செய்தியாளா்களிடம் மாவட்ட ஆட்சியா் ஸ்ரீராம் சாம்பசிவ ராவ் கூறியதாவது:

பறவைக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த செயல்திட்டத்தை மாநில அரசு வகுத்துள்ளது. எனவே பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை. பாதிப்பு கண்டறிப்பட்ட இரண்டு கோழிப்பண்ணைகளையொட்டி 1 கி.மீ. சுற்றுப்பரப்பளவில் உள்ள அனைத்து கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவைகளை அழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 10 கி.மீ. சுற்றளவில் கோழி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்டையிலுள்ள பகுதிகளுக்கு வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கப்படும் என்றாா்.

பறவை காய்ச்சல் வைரஸ் தொற்று நீா்நிலைகளைச் சாா்ந்து வாழும் பறவைகள் மூலம் ஏற்படுகிறது. அது, கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் மற்றும் நாட்டு கோழிகளுக்கும் பரவுகிறது.

முன்னதாக, பறவைக் காய்ச்சல் பாதிப்பு கடந்த 2016 ஆம் ஆண்டு கேரளத்தில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT