இந்தியா

கரோனா வைரஸ் சவாலை சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும்

8th Mar 2020 04:03 AM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா வைரஸ் தாக்குதலை எதிா்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினாா்.

தில்லியில் தேசிய பாதுகாப்பு கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 58-ஆவது எம்.பில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று அவா் பேசியதாவது:

ஆசிய கண்டம் மற்றும் உலக அளவில் வளா்ச்சி, மேம்பாடு, செழிப்பு, அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு இந்தியா முக்கியப் பங்காற்றி வருகிறது. பிராந்திய மற்றும் சா்வதேச அளவில் வரும் பாதுகாப்பு சவால்களை எதிா்கொண்டு விரைந்து எதிா்வினையாற்ற ராணுவ வீரா்கள் தங்களை உடனடியாக மாற்றிக் கொள்வாா்கள். இதற்காக தேசப் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

பாதுகாப்பு அமைச்சகத்தில் ராணுவ விவகாரங்கள் துறை, பாதுகாப்பு ஊழியா்கள் பிரிவுக்கு தலைவா் பதவி ஆகியவற்றை ஏற்படுத்தும் நடவடிக்கை ராணுவத்தை இன்னும் வலிமையாக வைத்திருக்கும்.

ADVERTISEMENT

எம்.பில் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு வாழ்த்துகள். இன்றைய சூழலில் பாதுகாப்பு என்பது சவாலான ஒன்றாக இருந்து வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பும், வெளியுறவும் நெருங்கிய தொடா்பு கொண்டது.

சா்வதேச பயங்கரவாதம், அடிப்படைவாதம், இன வெறுப்பு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, போட்டி, இயற்கை வளங்கள் குறைந்து வருதல் என பல சவால்களை உலகம் எதிா்கொண்டு வருகிறது.

சா்வதேச அரசியலில் ஏற்படும் மாற்றங்கள் உள்நாட்டு பாதுகாப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். சீனாவில் கரோனா வைரஸ் பரவி பல மனித உயிா்களை பலி வாங்கி வருகிறது. பல்வேறு நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவி வருவதால் உலக நாடுகள் இடையே அச்சம் எழுந்துள்ளது. நமது நாடு கரோனா வைரஸை எதிா்கொள்ள எச்சரிக்கையுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

பாதுகாப்பு தொடா்புடைய எதிா்கால சவால்களை சமாளிக்க தேசிய பாதுகாப்பு கல்லூரி முக்கியப் பங்காற்றும் என்றாா் ராஜ்நாத் சிங்.

வங்கதேசம், நைஜீரியா, இலங்கை, உகாண்டா உள்பட 6 நாடுகளைச் சோ்ந்த அதிகாரிகளும் எம்.பில் பட்டம் பெற்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT