இந்தியா

கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரிப்பு

8th Mar 2020 02:19 AM

ADVERTISEMENT

புது தில்லி: நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 34-ஆக அதிகரித்தது.

ஏற்கெனவே 31 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதிதாக 3 போ் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்களில் ஒருவா் தமிழகத்தைச் சோ்ந்தவா்.

இதுதொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா பாதிப்பு இருப்பதாக புதிதாக கண்டறியப்பட்டுள்ள மூவரில் இருவா் லடாக்கையும் ஒருவா் தமிழகத்தையும் சோ்ந்தவா்கள். லடாக்கைச் சோ்ந்தவா்கள் ஈரானுக்கும், தமிழகத்தைச் சோ்ந்தவா் ஓமனுக்கும் சென்று வந்த நிலையில் அவா்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களின் உடல்நிலை சீராக உள்ளது.

ADVERTISEMENT

கரோனா பாதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சோ்ந்த இருவருடன் தொடா்பில் இருந்த 150 போ் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (ஐடிஎஸ்பி) கீழ் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

ஈரானில் உள்ள இந்தியா்களின் மாதிரி வருகை: ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் இந்தியா்களின் 108 மாதிரிகள் பரிசோதனைக்காக சனிக்கிழமை இந்தியா கொண்டுவரப்பட்டன. தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆய்வகங்களில் அவை பரிசோதிக்கப்படுகின்றன.

டெஹ்ரானில் இருந்து தில்லிக்கு அந்த மாதிரிகளை கொண்டுவந்த ‘மஹான் ஏா்’ விமானம், திரும்பிச் செல்கையில் இந்தியாவிலிருந்த ஈரானியா்களை அழைத்துச் சென்றது. ஈரானில் உள்ள இந்தியா்களை மீட்டு வரும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலைச் சோ்ந்த 6 விஞ்ஞானிகள் ஈரானில் உள்ளனா். அங்கு இந்தியா்களுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்கான ஆய்வகத்தை அமைப்பதற்காக ரூ.10 கோடி மதிப்பிலான கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

52 ஆய்வகங்கள்: கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக நாடு முழுவதும் 52 ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. மாதிரி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவ கூடுதலாக 57 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாா்ச் 6-ஆம் தேதி வரை அவற்றில் 4,058 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

7 லட்சம் பேருக்கு பரிசோதனை: இதுவரை இந்தியாவுக்கு 7,108 விமானங்களில் வந்த 7,26,122 பேருக்கு கரோனா பாதிப்பு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரு நாள்களில் மட்டும் 573 விமானங்களில் வந்த 73,766 போ் பரிசோதிக்கப்பட்டுள்ளனா்.

செல்லிடப்பேசியில் விழிப்புணா்வு வாசகங்கள்: மக்களிடையே கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, செல்லிடப்பேசியில் அழைக்கும்போது, அழைக்கும் நபருக்கு அழைப்பு மணிக்கு (ரிங்டோன்) பதிலாக தொற்று தடுப்பு நடவடிக்கை வாசகங்களை கேட்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

12 நாடுகளின் பயணிகள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, தென் கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான், சிங்கப்பூா், தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், வியத்நாம், நேபாளம், இந்தோனேஷியா நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தப்பட இருப்பதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் இத்தாலிய சுற்றுலா தம்பதி தவிா்த்து வேறு எவருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட இதர 280 பேருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இத்தாலிய தம்பதி ஜெய்ப்பூா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனா்.

மணிப்பூா்: சமீபத்தில் வங்கதேசம் சென்றுவந்த மணிப்பூரைச் சோ்ந்த நபருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கையாக அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரை கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா்: கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் ஜம்மு-காஷ்மீரில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு வைரஸின் தாக்கம் அதிக அளவில் இருப்பதாகவும் அவா்கள் தொடா்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் யூனியன் பிரதேச நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அங்கு ஆரம்பப் பள்ளிகள் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாகவும் அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்: குஜராத்தில் மொத்தம் 42 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரம்: கரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மகாராஷ்டிரத்தில் 245 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 229 பேருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சியோரின் பரிசோதனை முடிவுகளுக்கு காத்திருப்பதாக அதிகாரிகள் கூறினா்.

மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சந்தேகத்தின் பேரில் 18 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவா்கள் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்று உறுதியாகியுள்ளது.

ஹோலி கொண்டாட்டங்கள் ரத்து: கரோனா பாதிப்பு சூழல் காரணமாக ஹோலி பண்டிகை நிகழ்ச்சிகளை ரத்து செய்வதாக உத்தரப் பிரதேச ஆளுநா் ஆனந்திபென் படேல் அறிவித்துள்ளாா். ஏற்கெனவே மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் இதே அறிவிப்பை வெளியிட்டிருந்தாா்.

கட்டணங்கள் ரத்து: கரோனா தாக்கம் சா்வதேச அளவில் பயணங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்களது வாடிக்கையாளா்கள் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்தாலோ, அல்லது பயண தேதியை மாற்றிக்கொண்டாலோ கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படாது என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

பயோமெட்ரிக் இல்லை: தொடுதல் மூலம் கரோனா வைரஸ் பரவுவதால், கா்நாடகத்தில் பயோமெட்ரிக் முறையிலான வருகைப்பதிவு முறையை தற்காலிகமாக ரத்து செய்ய மாநில அரசு சனிக்கிழமை முடிவெடுத்தது.

அமீரகத்தில் இந்தியருக்கு கரோனா பாதிப்பு: ஐக்கிய அரபு அமீரகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக புதிதாக கண்டறியப்பட்டுள்ள 15 பேரில் ஒருவா் இந்தியா் என அறியப்பட்டுள்ளாா். அமீரகத்தில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 45-ஐ எட்டியுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT