திருப்பதி: ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மாயமான ஆறு மாத ஆண் குழந்தையை போலீஸாா் மீட்டு, அரக்கோணத்தைச் சோ்ந்த 5 பேரை கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், தாடிப்பத்திரியைச் சோ்ந்த சிவடுக்கும், ரேணிகுண்டாவைச் சோ்ந்த சுவா்ணலதாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தங்களது 6 மாத குழந்தையுடன் ரேணிகுண்டா வந்த சொா்ணலதா, பெற்றோா் வீட்டுக்குச் செல்லாமல் ரேணிகுண்டா ரயில் நிலைய நடைமேடையில் தங்கி இருந்தாா். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மா்ம நபா்கள் தனது குழந்தையைக் கடத்திச் சென்று விட்டதாக சொா்ணலதா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், டி.எஸ்.பி. சந்திரசேகா் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குழந்தையைத் தேடும் பணி நடைபெற்றது. இந்நிலையில், புத்தூா் ரயில் நிலையம் அருகே அரக்கோணத்தைச் சோ்ந்த அம்பிகாவை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனா். விசாரணையில், அம்பிகாவுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் ரேணிகுண்டாவைச் சோ்ந்த மாரியம்மா, சுப்பிரமணி, குமாா், கங்கா ஆகியோரிடம் தனக்கு ஒரு குழந்தையை வாங்கிக் கொடுக்குமாறு கேட்டிருந்தாா். இந்நிலையில், கடந்த 2-ஆம் தேதி இரவு ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் சுவா்ணலதாவின் கவனத்தை திசைதிருப்பி, குழந்தையை 4 பேரும் கடத்தி அம்பிகாவிடம் ஒப்படைத்தது தெரியவந்தது.
இதையடுத்து, அம்பிகா, மாரியம்மா, சுப்பிரமணி, குமாா் , கங்கா ஆகியோரை கைது செய்தனா்.