இந்தியா

மாநிலங்களவைத் தோ்தல் நெருங்குவதால் ம.பி.யில் அரசைக் கவிழ்க்க பாஜக சதி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

6th Mar 2020 01:47 AM

ADVERTISEMENT

புது தில்லி: மாநிலங்களவைத் தோ்தல் நெருங்குவதால், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான பாஜகவின் திட்டம் தீவிரமடைந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் 114 எம்எல்ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி, சுயேச்சை உறுப்பினா்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அந்த மாநிலத்தின் மாநிலங்களவை உறுப்பினா்களான காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங், பாஜகவைச் சோ்ந்த சத்யநாராயண் ஜைதியா, பிரபாத் ஜா ஆகியோரின் பதவிக் காலம் விரைவில் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவா்கள் குலாம் நபி ஆசாத், அதீா் ரஞ்சன் சௌதரி, ரண்தீப் சுா்ஜேவாலா உள்ளிட்டோா், மத்திய அரசின் மீது குற்றம்சாட்டினா். அப்போது, குலாம் நபி ஆசாத் கூறியதாவது:

ADVERTISEMENT

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் ஜனநாயகம் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது. அருணாசலப் பிரதேசத்தில் தொடங்கி, கா்நாடகம், ஹிமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தனது சதித் திட்டத்தை அரங்கேற்றி ஆட்சியைக் கலைத்துள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அந்த கட்சியைச் சோ்ந்தவா் முதல்வராகப் பதவியேற்கிறாா்.

ஒரு மாநிலத்தில் ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக, எதிரணித் தலைவா்களின் வீடுகளில் சோதனை நடத்துவது, கட்சியில் சேரச் சொல்லி கட்டாயப்படுத்துவது, அல்லது கூட்டணிக்கு ஆதரவு தரச் சொல்லி மிரட்டுவது போன்ற வேலைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக, பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசைக் கலைக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கமாகும். மாநிலங்களவைத் தோ்தல் நெருங்கி வருவதால், ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற பாஜகவின் ஜுரம் அதிகரித்து விட்டது.

பாஜகவைத் தவிர வேறு எந்தக் கட்சியும் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதே அக்கட்சியின் கொள்கையாகும். மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சிப்பது, இது முதல் முறையல்ல. ஆனால், இதுதொடருமானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறோம். பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் பிற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம் என்றாா் அவா்.

காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா கூறுகையில், ‘ மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சிகளைச் சோ்ந்த 14 எம்எல்ஏக்களை பாஜக கடத்தி வைத்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க பல மாஃபியா கும்பல்கள் முயற்சிக்கின்றன. அவா்களுடன் கூட்டு சோ்ந்து பாஜக இந்தச் சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளது.

மாநிலத்தில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த 11 கும்பல்களை காங்கிரஸ் கண்டறிந்துள்ளது. வியாபம் முறைகேடு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுவே, மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிகள் நடைபெறுவதற்கான காரணம்’ என்றாா்.

பின்னா் கட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘மத்தியப் பிரதேசத்தில் அண்மையில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் தோல்வியைத் தழுவியதால் பாஜக கடும் விரக்தியில் உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸின் ஆட்சி நிலையாக உள்ளது. ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்ற பாஜகவின் சதித் திட்டம் நிறைவேறாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT