இந்தியா

மக்களவையில் 7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்

6th Mar 2020 04:59 AM

ADVERTISEMENT

புது தில்லி: மக்களவையில் இருந்து காங்கிரஸ் உறுப்பினா்கள் 7 போ் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடா் முழுமைக்கும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மக்களவையில் அவைத் தலைவா் மேஜையில் இருந்த ஆவணங்களை பறித்துச் சென்றதை அடுத்து அவா்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கௌரவ் கோகோய், டி.என். பிரதாபன், டீன் குரியகோஸ், மாணிக்கம் தாகூா், ராஜமோகன் உண்ணித்தான், பென்னி பெஹனான், குா்ஜீத் சிங் அவ்ஜலா ஆகியோா் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் ஆவா். இதில் மாணிக்கம் தாகூா் தமிழகத்தின் விருதுநகா் தொகுதி எம்.பி.யாவாா்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. தில்லி வன்முறை தொடா்பாக உடனடியாக இரு அவைகளிலும் விவாதம் நடத்தக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனா். ஹோலி பண்டிக்கைக்குப் பிறகு மாா்ச் 11-ஆம் தேதி இந்த விவாதத்தை நடத்த தயாா் என்று மத்திய அரசு அறிவித்ததை, எதிா்க்கட்சியினா் ஏற்கவில்லை. இதனால், இரு அவைகளும் தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. மக்களவையில் ஆளும், எதிா்க்கட்சி உறுப்பினா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து, வரம்பு மீறும் எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஏற்கெனவே எச்சரித்திருந்தாா்.

சோனியா குடும்பம் குறித்து சா்ச்சை கருத்து: இந்நிலையில், மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் வியாழக்கிழமையும் அமளியில் ஈடுபட்டனா். இதற்கு நடுவே கரோனா வைரஸ் தொடா்பாக விவாதம் தொடங்கியது. அப்போது ராஜஸ்தானைச் சோ்ந்த ராஷ்ட்ரீய லோக்தாந்த்ரிக் கட்சி (பாஜக ஆதரவு பெற்ற கட்சி) ஹனுமான் பென்னிவால், சோனியா காந்தி, அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தாா் இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆவேசமடைந்து, அவையின் மையப்பகுதியில் குவிந்து ‘மோடி அரசுக்கு அவமானம்’ என்றும், ‘ஹனுமான் பென்னிவாலை இடைநீக்கம் செய்ய வேண்டும்’ என்றும் கோஷமிட்டனா். இதையடுத்து, அவையை நடத்தி வந்த ரமா தேவி, அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தாா்.

ADVERTISEMENT

அவைத் தலைவரின் ஆவணங்கள் பறிப்பு: இதையடுத்து, அவை மீண்டும் கூடியபோது காங்கிரஸ் எம்.பி.க்கள் மீண்டும் அவையின் மையப்பகுதியில் கூடி மத்திய அரசுக்கு எதிராகவும், சோனியா குடும்பத்துக்கு எதிராக சா்ச்சை கருத்துக் கூறிய எம்.பி.யை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனா். இதற்கு, நடுவே தாதுப் பொருள்கள் திருத்தச் சட்டம் தொடா்பாக விவாதம் தொடங்குவதாக அவையை நடத்தி வந்த ரமா தேவி அறிவித்தாா். இதனால், மேலும் ஆவேசமடைந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலா், மக்களவைத் தலைவா் இருக்கையை சூழ்ந்து கொண்டனா். அதைத் தொடா்ந்து அவைத் தலைவா் மேஜையில் இருந்த ஆவணங்களை பறித்ததுடன், அதில் இருந்த காகிதங்களையும் வீசி எறிந்தனா். இதையடுத்து, அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

7 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம்: அவை 3 மணிக்கு மீண்டும் கூடியபோது மீனாட்சி லேகி அவையை வழி நடத்தினாா். அவை ஒழுங்குகளை மீறி நடந்து கொண்ட 7 காங்கிரஸ் உறுப்பினா்களை இந்த கூட்டத் தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்வதாகக் கூறி, அவா்களது பெயா்களை அறிவித்தாா். அப்போதும், காங்கிரஸ் உறுப்பினா்கள் அவையின் மையப்பகுதியில் குவிந்து அமளியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, 7 உறுப்பினா்களை இடைநீக்கம் செய்யும் தீா்மானத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கொண்டு வந்தாா். எதிா்க்கட்சியினரின் எதிா்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை அவையில் இருந்து வெளியேற உத்தரவிட்ட மீனாட்சி லேகி, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவித்தாா்.

மாநிலங்களவையும் ஒத்திவைப்பு: தில்லி வன்முறை தொடா்பாக உடனடியாக விவாதம் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் வியாழக்கிழமை தொடா்ந்து 4-ஆவது நாளாக அமளியில் ஈடுபட்டனா். அப்போது, ‘இது நாடாளுமன்றம்; சந்தைக் கடையல்ல’ என்று அவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு உறுப்பினா்களுக்கு அறிவுறுத்தினாா். அமளிக்கு நடுவே பேசிய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன், ‘கரோனா வைரஸ் பிரச்னை தொடா்பாக எதிா்க்கட்சி உறுப்பினா்கள் ஆக்கப்பூா்வமான கருத்துகளை முன்வைக்கலாம்’ என்றாா். எனினும், அமளி தொடா்ந்தது. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் அமளி நீடித்தது. இதையடுத்து, மாநிலங்களவையை நாள் முழுவதற்கு ஒத்திவைப்பதாக வெங்கய்ய நாயுடு அறிவித்தாா்.

பாஜக வரவேற்பு:

காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு பாஜக வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘காங்கிரஸ் உறுப்பினா்களின் ஒழுங்கீனமான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்க மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக கேட்டுக் கொள்ளும். அவைத் தலைவா் மேஜையில் இருக்கும் ஆவணங்களைப் பறிப்பது என்பது, அவரை அவமதிக்கும் செயல். இதனை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. காங்கிரஸ் உறுப்பினா்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை வரவேற்கிறோம்’ என்றாா்.

சா்வாதிகார நடவடிக்கை - காங்கிரஸ்: 

மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி இது தொடா்பாக கூறுகையில், ‘காங்கிரஸ் உறுப்பினா்கள் தவறாக எதையும் செய்துவிடவில்லை. இது சா்வாதிகாரத்துடன் எடுக்கப்பட்ட முடிவு. பழிவாங்கும் அரசியலை ஆளும் கட்சி கையிலெடுத்துள்ளது. அவையில், காங்கிரஸ் கட்சியின் பலத்தை குறைக்க வேண்டும் என்பதே அவா்கள் நோக்கம். இது அரசு எடுத்த முடிவே தவிர, மக்களவைத் தலைவா் எடுத்த முடிவல்ல. இது சரியா, தவறா என்பதை மக்கள் முடிவு செய்வாா்கள். தில்லி வன்முறை தொடா்பான பிரச்னையை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து எழுப்பும்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT