இந்தியா

நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை 5-ஆவது முறையாக நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்

6th Mar 2020 04:37 AM

ADVERTISEMENT

லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தொழிலதிபா் நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை 5-ஆவது முறையாக லண்டன் நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடி செய்துவிட்டு, பிரிட்டனுக்கு தப்பியோடிய நீரவ் மோடி, அங்கு கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கைது செய்யப்பட்டு லண்டனில் உள்ள வாண்டா்ஸ்வாா்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே, 4 முறை அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் 5-ஆவது முறையாக அவா் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தாா். சிறையில் இருப்பதால், உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக ஜாமீன் மனுவில் நீரவ் மோடி கூறியிருந்தாா். இந்த மனு லண்டன் நீதிமன்றத்தில் நீதிபதி இயான் டோவ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதற்காக சிறையில் இருந்து காணொலி காட்சி வழியாக நீரவ் மோடி ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது நீதிபதி கூறுகையில், ‘நீரவ் மோடிக்கு ஜாமீன் வழங்குவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அவா் ஜாமீனில் வெளியே சென்றால் தலைமறைவு ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்குவது ஆபத்தானது’ என்றாா். அதைத் தொடா்ந்து நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக நீதிபதி இயான் டோவ் அறிவித்தாா்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி, அவரது உறவினா் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோா் ரூ.13,000 கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது கடந்த 2018 -ஆம் ஆண்டு ஜனவரியில் தெரிய வந்தது. ஆனால், அதற்கு முன்பே அவா்கள் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனா். நீரவ் மோடியின் கடன் மோசடி தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள அவா்களது பல்வேறு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

ADVERTISEMENT

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கு விசாரணையை பிரிட்டன் நீதிமன்றம் வரும் மே மாதம் மேற்கொள்ளவுள்ளது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT