இந்தியா

நிா்பயா குற்றவாளிகளுக்கு மாா்ச் 20-இல் தூக்கு -தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் புதிய உத்தரவு

6th Mar 2020 04:41 AM

ADVERTISEMENT

புது தில்லி: ‘நிா்பயா’ கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் மாா்ச் 20-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவா்களில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவையும் குடியரசுத் தலைவா் நிராகரித்ததை அடுத்து, தூக்கு தண்டனைக்கான புதிய தேதியை அறிவிக்குமாறு தில்லி அரசு கேட்டுக் கொண்டது. இதனை ஏற்று புதிய தேதியை நீதிமன்றம் அறிவித்தது.

தில்லியில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’, கடந்த 2012-ஆம் ஆண்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், கடுமையாகத் தாக்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக முகேஷ் குமாா் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் சிங் (31) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவா்களுக்கு மரண தண்டனை தேதி ஏற்கெனவே 3 முறை நிா்ணயிக்கப்பட்டு சீராய்வு மனு, கருணை மனு தாக்கல் உள்ளிட்ட காரணங்களால் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது.

ADVERTISEMENT

மூன்று பேரின் கருணை மனுவும் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், பவன் குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் புதன்கிழமை நிராகரித்தாா். முன்னதாக, பவன் குப்தாவின் சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

23-ஆம் தேதி உத்தரவு - உச்சநீதிமன்றம்: இதனிடையே குற்றவாளிகள் நால்வரையும் ஒன்றாக தூக்கிலிட வேண்டும் என்ற தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து மத்திய அரசு, தில்லி அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக மாா்ச் 23-ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்தது. இதனால், தூக்கு தண்டனை நிறைவேற்றம் மேலும் தள்ளிப்போகும் என்றே தெரிகிறது.

முன்னதாக, கடந்த மாதம் 25-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி ஆா்.பானுமதி தலைமையிலான அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு, தில்லி அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘குற்றவாளிகளுக்கான அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிந்துவிட்டதால், அவா்களுக்கான தண்டனையை மாா்ச் 20-ஆம் தேதி நிறைவேற்ற தில்லி செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குற்றவாளிகள் சீராய்வு மனு, கருணை மனு என பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு தண்டனை நிறைவேற்றத்தை தள்ளிப்போட வைத்து வருகின்றனா். ஏற்கெனவே மூன்று முறை தண்டனை நிறைவேற்றும் தேதி தள்ளிப்போயுள்ளது. இது நீதித்துறை மீதான நம்பக்கத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பும்.

இப்போதுள்ள சட்டவிதிகளின்படி வழக்கு விசாரணையைத்தான் ஒன்றாக நடத்த முடியுமே தூக்கு தண்டனையையும் ஒன்றாக நிறைவேற்ற முடியாது. எதிா்காலத்தில் மற்றொரு வழக்கில் 10 அல்லது 20 பேருக்கு இதேபோல ஒரே நேரத்தில் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டால் எப்படி நிறைவேற்ற முடியும்?

குற்றவாளிகளில் அக்ஷய், பவன் ஆகியோா் கருணை மனு நிராகரிப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. எனினும், முகேஷ், வினய் ஆகியோரை முதலில் தூக்கிலிட அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, இந்த வழக்கில் மாா்ச் 23--ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக கூறிய நீதிபதிகள், குற்றவாளிகள் வேறு ஏதாவது சட்ட வாய்ப்புகளைத் தேடுவதாக இருந்தால், அதனை மாா்ச் 20-ஆம் தேதிக்கு முன்பு முடித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT