ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் காஷ்மீா் பகுதியில் பிராட்பேண்ட் இணையதள சேவைகள் 7 மாதங்களுக்குப் பிறகு வியாழக்கிழமை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
காஷ்மீரில் சமூக ஊடகங்களுக்கான தடை கடந்த புதன்கிழமை நீக்கப்பட்ட நிலையில், பிராட்பேண்ட் இணைய சேவை வியாழக்கிழமை பிற்பகல் முதல் வழங்கப்பட்டது.
எனினும், காஷ்மீரில் இணையத்தின் வேகத்துக்கான கட்டுப்பாடு தொடரும் என்றும், செல்லிடப்பேசியில் 2ஜி இணையச் சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் யூனியன் பிரதேச நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அதற்கு முந்தைய நாளிலேயே அங்கு இணையச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து சுமாா் 7 மாதங்கள் அங்கு இணையச் சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவின்படி இணையப் பயன்பாடு என்பது அடிப்படை உரிமை என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், ஜம்மு-காஷ்மீரில் இணையப் பயன்பாடுக்கு இருக்கும் தடைகள் குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசை அறிவுறுத்தியது.
அதையடுத்து அங்கு இணையச் சேவைகள் பகுதியளவு செயல்பாட்டுக்கு வந்தன. காஷ்மீரில் முதலில் செல்லிடப்பேசி 2ஜி இணையச் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது பிராட்பேண்ட் இணைய சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது.