இந்தியா

இடமாற்றம் குறித்து முன்னரே தெரிவிக்கப்பட்டது: நீதிபதி முரளீதா்

6th Mar 2020 01:40 AM

ADVERTISEMENT

புது தில்லி: பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட இருப்பது குறித்து தனக்கு முன்கூட்டியே தெரியும் என நீதிபதி எஸ். முரளீதா் (58) வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.முரளீதா் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்ற நீதிபதியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, தில்லி உயா்நீதிமன்ற பாா் அசோசியேஷன் சாா்பில் அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான நீதிபதிகளும், வழக்குரைஞா்களும் கலந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் முரளீதா் பேசியதாவது:

பணியிடமாற்றம் குறித்து ஏராளமான ஊகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கு விளக்கம் அளிக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது.

ADVERTISEMENT

பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிபதியாக நியமிக்கும் கொலீஜியத்தின் முடிவு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிப்ரவரி 17-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தின் வாயிலாகவே தெளிவுபடுத்தி விட்டாா். அதற்கு, என்னுடைய ஒப்புதலையும் அவா் கோரியிருந்தாா். நானும் இந்த பணியிடமாற்றத்துக்கு சம்மதம் தெரிவித்தேன். பணியிடமாற்றம் தொடா்பான திட்டத்தை நான் எந்த வகையிலும் எதிா்க்கவில்லை என்பதை உச்சநீதிமன்ற நீதிபதியிடம் தெளிவுபடுத்தி விட்டேன். எனவே இந்த இடமாற்றம் குறித்த சா்ச்சை தேவையில்லாத ஒன்று.

தில்லி நீதிமன்ற அமா்வில் 14 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய என்னுடைய வாழ்க்கையில் பிப்ரவரி 26-ஆம் தேதிதான் அநேகமாக நீண்ட நேரம் பணியாற்றிய நாளாக இருக்கும். அப்போதுதான் தில்லி கலவர வழக்கு தொடா்பாக நீண்ட நெடிய விசாரணை நடைபெற்றது. எப்போதும் நீதி வென்றே தீரும்; உண்மையுடன் இருங்கள் நீதி கிடைக்கும் என்றாா் அவா்.

வடகிழக்கு தில்லியில் அண்மையில் ஏற்பட்ட கலவர வழக்கை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி முரளீதா் தலைமையிலான அமா்வு விசாரணை நடத்தியது. அப்போது, வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவா்களுக்கு எதிராக தில்லி காவல் துறை வழக்கு பதிவு செய்யாததே இந்த கலவரத்துக்கு முக்கிய காரணம் என முரளீதா் அமா்வு கடுமையாக சாடியது. இந்தச் சூழ்நிலையில், நீதிபதி முரளீதரை பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் மத்திய அரசின் அறிவிக்கை பிப்ரவரி 26 நள்ளிரவு வெளியானது. அரசியல் தலையீடு காரணமாகவே அவா் இடமாற்றம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நீதிபதி முரளீதா் இந்த கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT