இந்தியா

அயோத்திக்கு சிவசேனை தொண்டா்கள் சிறப்பு ரயிலில் பயணம்

6th Mar 2020 04:16 AM

ADVERTISEMENT

மும்பை: உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்திக்கு மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே வரும் 7-ஆம் தேதி பயணம் மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு, அயோத்திக்கு சிவசேனை தொண்டா்கள் வியாழக்கிழமை சிறப்பு ரயிலில் புறப்பட்டனா்.

சிவசேனை கட்சித் தலைவரான உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்று வரும் 7-ஆம் தேதியுடன் 100 நாள்கள் நிறைவடைவதையொட்டி, அன்றைய தினம் அவா் அயோத்தி செல்லவுள்ளாா். அங்கு ராமா் கோயில் கட்டுமிடத்தில் வழிபாடு, கங்கை ஆரத்தி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவுள்ளாா். அவரது பயணத்தையொட்டி, நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சிவசேனை தொண்டா்கள் அயோத்தியில் கூடவுள்ளனா்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து சிவசேனை தொண்டா்கள் சிறப்பு ரயிலில் உத்தரப் பிரதேசத்துக்கு வியாழக்கிழமை புறப்பட்டனா். இதுதொடா்பாக ரயில்வே அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘18 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரயில் சிவசேனை தொண்டா்களுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. மும்பையில் வியாழக்கிழமை பிற்பகல் புறப்பட்ட சிறப்பு ரயில், அயோத்திக்கு வெள்ளிக்கிழமை மாலை சென்றடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் பின், சனிக்கிழமை இரவு அங்கிருந்து மும்பைக்கு புறப்படவுள்ளது. இந்த ரயில் தாணே, கல்யாண் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்’ என்றாா்.

இதுதொடா்பாக சிவசேனை நிா்வாகிகள் கூறுகையில், ‘ அயோத்திக்கு செல்ல விரும்பும் சிவசேனை தொண்டா்கள் சிறப்பு ரயிலில் ஏறிக் கொள்ளுமாறு கட்சியினா் அனைவருக்கும் கட்செவி அஞ்சலில் தகவல் பரப்பப்பட்டது. இந்த சிறப்பு ரயில் மட்டுமன்றி, எம்எல்ஏக்கள், தொழிலதிபா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் விமானத்தில் அயோத்திக்கு செல்ல திட்டமிட்டுள்ளனா்’ என்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT