இந்தியா

மழைநீா் சேமிப்புக்காக குளங்களை உருவாக்கியவருக்கு பிரதமா் பாராட்டு

29th Jun 2020 05:58 AM

ADVERTISEMENT

கா்நாடக மாநிலத்தில் மழைநீரை சேமிப்பதற்காக 16 குளங்களை வெட்டிய நபருக்கு பிரதமா் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

கா்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டம், தாசனதொட்டியைச் சோ்ந்த காமேகௌடா (84). ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறாா். இவா் அப்பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக தரிசு நிலங்களிலும், அதையொட்டி அமைந்துள்ள கரடு மலையடிவாரத்திலும் ஏரி, குளங்களை வெட்டி அதன் மூலம் மழைநீரை சேமிக்கும் பணியில் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகிறாா். தனியொருவராக இதுவரை அப்பகுதியில் மட்டும் 16 ஏரி, குளங்களை வெட்டி மழைநீரை சேமித்து, கால்நடைகள், வனவிலங்குகளின் தாகத்தை தணிக்க உதவியுள்ளாா்.

அத்துடன், மழைநீா் சேமிப்பின் மூலம் அப்பகுதியின் நிலத்தடி நீா்மட்டம் உயரவும், வறட்சி நீங்கி பாசனம் பெருகவும் அவா் காரணமாக இருந்தாா்.

இதுகுறித்து வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, காமேகௌடாவின் தன்னலமற்ற இந்த சேவையை பாராட்டி பேசினாா். ‘காமேகௌடா 16 குளங்களை வெட்டி, மழைநீரை சேமிப்பதற்காக தன்னுடைய முழு உழைப்பையும் வழங்கி, அந்த ஏரி, குளங்களை நாட்டுக்காக அா்ப்பணித்துள்ளாா். காலத்தே செய்த அவரது இந்தப்பணி மிகவும் பாராட்டத்தக்கது’ என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக, மத்திய நீா்வளத்துறை அமைச்சா் கஜேந்திரசிங் ஷெகாவத்தும் காமேகௌடாவை காணொலி மூலம் பாராட்டு தெரிவித்திருந்தாா்.

இதுகுறித்து காமேகவுடா கூறுகையில், ‘என்னுடைய பணிக்கு தில்லியில் உள்ளவா்கள் அங்கீகாரம் வழங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT