இந்தியா

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்து: மத்திய அரசின் முடிவை ஏற்றது உச்ச நீதிமன்றம்

26th Jun 2020 01:11 PM

ADVERTISEMENT

 

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. 

நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் உள்ள தோ்வுகளை ஜூலை 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடத்துவதற்கு சிபிஎஸ்இ முடிவு செய்திருந்தது. ஆனால், கரோனா பரவல் அதிகரிப்பால் பெற்றோர்கள் சிபிஎஸ்இ-இன் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த வழக்கில் நேற்று பதில் அளித்தார். 

ADVERTISEMENT

அதன்படி,  'ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும்  ரத்து செய்யப்படுகிறது. முந்தைய மதிப்பீட்டுத் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ ஒப்புக்கொண்டுள்ளது. அதே நேரத்தில் 12 ஆம் மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பும்பட்சத்தில், பொதுமுடக்கம் முடிவடைந்த பின்னர் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம்' என்று தெரிவித்தார். 

மகாராஷ்டிரம், தில்லி, தமிழகம், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் கேட்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் தெரிவித்தார். 

இந்நிலையில், மத்திய அரசின் இந்த பதிலை உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது. எனவே, சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவது உறுதி ஆகியுள்ளது. 

ஐ.சி.எஸ்.இ தேர்வுகள்:

சிபிஎஸ்இ முடிவுகளையே ஐ.சி.எஸ்.இ வாரியமும் பின்பற்றுவதாகக் கூறியுள்ளது. ஆனால், சிபிஎஸ்இ, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத வழங்கிய வாய்ப்பை ஐ.சி.எஸ்.இ வழங்க மறுத்துவிட்டது. ஐ.சி.எஸ்.இ. இன் கீழ் வரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

ஜூலை 15ல் தேர்வு முடிவுகள்

மேலும் இன்றைய விசாரணையில் முந்தையை மதிப்பீட்டுத் தேர்வுகளின் அடிப்படையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும் என்று சிபிஎஸ்இ தேர்வு நடத்தும் கண்காணிப்பாளர் சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். 

அதேநேரத்தில் பொதுத் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்களுக்கு அதன் அடிப்படையில் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படும் என்றார். 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT