இந்தியா

சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய நிலப்பரப்பை மோடி எவ்வாறு திரும்பப் பெறுவார்? - சோனியா காந்தி கேள்வி

26th Jun 2020 04:41 PM

ADVERTISEMENT

 

லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய நிலப்பரப்பை மோடி எவ்வாறு திரும்பப் பெறுவார் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லைப் பிரச்னை குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. சமூக வலைத்தளங்களில் காங்கிரஸ் - பாஜகவினர் இடையே இதுகுறித்து கருத்து மோதல் நிலவி வருகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சீன எல்லைப் பிரச்னை குறித்து மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார். 

ADVERTISEMENT

அதில், சீன இராணுவம் லடாக்கில் இந்தியப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது. சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய நிலப்பகுதியை மோடி அரசாங்கம் எப்படி திரும்பப் பெறும்? 

இன்று ராணுவத்துக்கும், ராணுவ வீரர்களுக்கும் மக்கள் துணை நிற்கிறார்கள். அதேபோன்று அரசும் ராணுவத்திற்கு முழு ஆதரவையும் வழங்க வேண்டும். அதுவே உண்மையான தேசபக்தி.

இந்திய-சீன எல்லையில் நெருக்கடி நிலை உருவாகியுள்ள சூழலில், ​​மத்திய அரசு தனது பொறுப்புகளில் இருந்து பின்வாங்க முடியாது. லடாக் எல்லையில் எந்த ஊடுருவலும் இல்லை என பிரதமர் மோடி கூறினார். ஆனால், பாதுகாப்புத் துறை அமைச்சரும் வெளியுறவுத் துறை அமைச்சரும் சீன ஊடுருவலை பலமுறை குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், ராணுவத் தளபதிகள், பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் இந்திய எல்லையில் சீன ஊடுருவலை உறுதிப்படுத்தியுள்ளன. அவ்வாறு இருக்கையில் பிரதமர் மோடி சொல்வது உண்மை என்றால், 20 இந்திய ராணுவ வீரர்கள் எவ்வாறு உயிரிழந்தனர்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக காங்கிரஸ் 'ஷாஹிதான் கோ சலாம் திவாஸை' அனுசரிக்கிறது. நம் நாட்டிற்காக அவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களால் இன்று நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். அதேபோன்று ராணுவத்தைப் பாதுகாப்பதன் மூலமே நாட்டை பாதுகாக்க முடியும் என்று குறிப்பிட்டார். 

Tags : sonia gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT