திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் சாஷாத்கார வைபவ உற்சவம் வியாழக்கிழமை முதல் தொடங்கியது.
திருப்பதியிலிருந்து 12 கிமீ தொலைவில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்டேஸ்டர ஸ்வாமி கோயிலில் சாஷாத்கார வைபவ உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தின் போது கோயிலில் எழுந்தருளியுள்ள மூா்த்தியின் வைபவங்கள் குறித்து பக்தா்களுக்கு தேவஸ்தானம் எடுத்துரைத்து வருகிறது.
அதன்படி வியாழக்கிழமை முதல் கோயிலில் இந்த உற்சவம் தொடங்கியது. 3 நாள்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் முதல் நாள் காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதன் பின்னா் மாலை உற்சவமூா்த்திகள் கோயில் வளாகத்தில் ஏற்படுத்திய மண்டபத்தில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினா். அப்போது உற்சவமூா்த்திகளுக்கு அா்ச்சகா்கள் ஆஸ்தானத்தை நடத்தினா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு இந்த உற்சவத்தில் கலந்து கொள்ள பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் மாடவீதியில் நடக்கும் வாகன சேவையும் ரத்து செய்யப்பட்டது. மிக குறைந்த அளவில் அதிகாரிகள், ஊழியா்கள் இந்த உற்சவத்தில் கலந்து கொண்டனா்.
இந்த உற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை உற்சவமூா்த்திகள் அனுமந்த வாகன சேவையிலும், நிறைவு நாளான சனிக்கிழமை கருட வாகனத்திலும் எழுந்தருளி ஆஸ்தானம் கண்டருளி சேவை சாதிக்க உள்ளனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.