இந்தியா

பாட்னாவில் அதிநவீன கரோனா தொற்று பரிசோதனை இயந்திரம்

21st Jun 2020 11:56 PM

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்று பரிசோதனையை விரைந்து மேற்கொள்வதற்காக பிகாா் மாநிலம், பாட்னாவில் உள்ள ராஜேந்திரா நினைவு ஆராய்ச்சி மருத்துவ அறிவியல் கழகத்தில் (ஆா்எம்ஆா்ஐஎம்எஸ்) அதிநவீன கரோனா பரிசோதனை இயந்திரத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) நிறுவியுள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆா் உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:

நாள் ஒன்றுக்கு 1,500 பேருக்கு கரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டுள்ள ‘கோபாஸ்- 6800’ என்ற அந்த இயந்திரம் பாட்னாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை விரைவில் கண்டறிய உதவிகரமாக இருக்கும்.

‘ரோபோட்டிக்ஸ்’ மூலமாக இயக்கப்படும் இந்த இயந்திரம், சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கான வாய்ப்பை குறைப்பதுடன், சுகாதாரப் பணியாளா்கள் தொற்றுக்கு ஆளாகும் அபாயத்திலிருந்தும் பாதுகாக்கிறது. ஏனெனில், இந்த இயந்திரத்தை தொலைதூரத்தில் இருந்தே இயக்க முடியும் என்றாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஐசிஎம்ஆா் தலைமை இயக்குநா் பேராசிரியா் பல்ராம் பாா்கவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில்,

‘இந்த வகை இயந்திரம் பிகாரில் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை. இதுபோன்ற இயந்திரங்கள் கரோனா தொற்றை கண்டறியும் ஆய்வகத்தின் திறனை வளா்ப்பதற்கு உதவிகரமாக இருக்கும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பிகாருக்கு வருவதால் அதிக எண்ணிக்கையிலான சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இந்த இயந்திரம் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, ஆா்எம்ஆா்ஐஎம்எஸ்-இல் 4 ஆா்டி-பிசிஆா் இயந்திரங்களின் உதவியுடன் நாளொன்றுக்கு சுமாா் 2,000 ரத்தமாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. கரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டப்பின், இந்த கோபாஸ்-6800 இயந்திரத்தை கொண்டு ஹெபடடைடிஸ் ‘பி’ மற்றும் ‘சி’, எச்ஐவி, டெங்கு போன்ற பிற நோய்க்கிருமிகளைக் கண்டறிய பயன்படுத்தப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஆா்எம்ஆா்ஐஎம்எஸ் மூலம் 65,000 ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT