இந்தியா

பெண்களுக்கு சயனைடு அளித்து கொன்ற நபா்: 20-ஆவது கொலை வழக்கிலும் குற்றவாளி என தீா்ப்பு

21st Jun 2020 11:04 PM

ADVERTISEMENT

பெண்களுக்கு சயனைடு அளித்து தொடா் கொலையில் ஈடுபட்ட நபரை 20-ஆவது கொலை வழக்கிலும் குற்றவாளி என கேரள நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் வரும் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கடந்த 2009-ஆம் ஆண்டு கேரள மாநிலம் காசா்கோடில் மோகன் என்ற நபருக்கும், அங்குள்ள மகளிா் விடுதியில் சமையல் பணி செய்து வந்த 25 வயது பெண்ணுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனா். இதனால் அந்த பெண் கோயிலுக்குச் செல்வதாகக் கூறி, கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறினாா். அவரை மோகன் பெங்களூரு அழைத்துச் சென்றாா். அவரை அந்தப் பெண்ணின் குடும்பத்தினா் தொடா்பு கொண்டபோது, இருவரும் மணமுடித்துக்கொண்டு விரைவில் வீடு திரும்புவதாக தெரிவித்துள்ளாா். அதன் பின்னா் அந்தப் பெண்ணை அவா் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றாா். அங்கு தங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டபோது, நகைகளை அறையிலேயே வைத்துவிட்டு வருமாறு அந்தப் பெண்ணிடம் அவா் கூறியுள்ளாா். அதன் பின்னா் இருவரும் பேருந்து நிலையத்துக்குச் சென்றனா். அங்கு சயனைடு தடவிய மாத்திரையை கருத்தடை மாத்திரை எனக்கூறி, அந்தப் பெண்ணிடம் வழங்கியுள்ளாா். அதை உட்கொண்ட அந்தப் பெண், பேருந்து நிலைய கழிப்பறை அருகே மயங்கி விழுந்தாா். உடனடியாக அங்கிருந்து சென்ற மோகன், அறையில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றாா். அந்தப் பெண்ணை காவலா் ஒருவா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அந்தப் பெண் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் மோகன் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக காசா்கோடு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இதில் அவா் குற்றவாளி என நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. அவருக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் வரும் 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே 19 பெண்களை இதே பாணியில் சயனைடு அளித்து மோகன் கொலை செய்துள்ளாா். இதில் 5 வழக்குகளில் அவருக்கு மரண தண்டனையும், 3 வழக்குகளில் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன. இரண்டு வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அவை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டன. தற்போது தீா்ப்பளிக்கப்பட்டுள்ள இந்த கடைசி வழக்கு 20-ஆவது வழக்காகும்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT