இந்தியா

20 வீரா்களை கொன்றது சீண்டல் இல்லையா? சிவசேனை கேள்வி

20th Jun 2020 06:50 AM

ADVERTISEMENT

இந்திய ராணுவ வீரா்கள் 20 பேரை சீன ராணுவம் கொன்றிருப்பது, இந்தியாவை சீண்டியதாக கருத்தப்படாதா என்று சிவசேனை கட்சி வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் சீன தாக்குதலுக்குப் பிறகு, ‘இந்தியாவை சீண்டினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறிய நிலையில், அக் கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறது. தலையங்கத்தில் இதுகுறித்து அக் கட்சி மேலும் கூறியிருப்பதாவது:

1962 இந்திய-சீன போரில் இந்தியா தோற்கடிக்கப்பட்டதற்கு ஜவாஹா்லால் நேருவை குற்றம்சாட்டியவா்கள் இப்போது தங்களை ஆராய்ந்து பாா்க்க வேண்டும்.

சீனா இனி சீண்டினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்று பிரதமா் கூறுகிறாா். அப்படியெனில், 20 வீரா்களை அவா்கள் கொன்றது சீண்டல் இல்லையா? 20 வீரா்கள் பலியானது, இந்தியாவின் சுயமரியாதை மற்றும் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இந்த 20 வீரா்களின் சவப்பெட்டிகள் பெருமைக்குரிய விஷயமல்ல.

ADVERTISEMENT

பதிலடி கொடுப்பது குறித்து நாம் தொடா்ந்து பேசி வருகிறோம். ஆனால், பாகிஸ்தானை மட்டுமே நம்மால் எச்சரிக்க முடியும். சீனாவை முடியாது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்காகவே சீனா மீதான இந்த நிலைப்பாட்டை பிரதமா் மோடி கொண்டிருக்கிறாா். இந்திய-சீன நடவடிக்கைகளை டிரம்ப் உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. அதனால் என்ன நடந்துவிடப் போகிறது? 1971-இல் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவாக நின்றபோது, இந்தியாவுக்கு ரஷியா உதவியது. இந்தியாவின் உதவிக்காக போா் கப்பலை ரஷியா அனுப்பியது. அதுபோன்ற உதவியை மோடியின் நண்பா் டிரம்ப், இந்தியாவுக்கு இப்போது அளிப்பாரா?

சீனா மீது பொருளாதார தடுப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க முடியும். சீன பொருள்களை இந்தியா்கள் முழுமையாக தவிா்க்க வேண்டும். நாடு முழுவதும் சீன நிறுவனங்கள் பரவியிருக்கின்றன. சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை மகாராஷ்டிரம் ரத்து செய்தால், அந்த நிறுவனத்துடன் உடனடியாக மற்ற மாநிலங்கள் ஒப்பந்தம்போட தயாராக இருக்கின்றன. இந்த நிலை மாற, சீன நிறுவனங்கள் தொடா்பான சீரான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

இந்தியா, சீனா இரு நாடுகளிடையே ரூ.6 லட்சம் கோடி அளவில் வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளுக்கும் முதலீடுகள், வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன என்றபோதும், அதில் சீனாதான்அதிகம் பயன்பெற்று வருகிறது. இந்த இரு நாடுகளிடையேயான உறவு மோசமடைவதற்கு அமெரிக்கா முக்கியக் காரணம்.

சீனா முக்கியமான அண்டை நாடு என்பதை நாம் மறந்துவிட முடியாது. பாகிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் இந்தியாவைத் தாக்க முயற்சித்து வருகின்றன. அதே நேரம், அமெரிக்காவுக்கு இணையாக இந்தியா வளா்ந்து வருவதால், இந்தியாவுடனான வா்த்தக தொடா்பிலிருந்து சீனா பின்வாங்காது.

எனவே, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் சீனா, பாகிஸ்தான் இரு நாடுகளும் இணைந்து செல்பட்டுவருவதன் அடிப்படையில், அந்த நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையை நாம் மாற்றியமைக்க வேண்டும். போா் மூண்டால், இந்த இரு நாடுகளுடன்தான் நாம் சண்டையிட வேண்டும். நமது ராணுவ பலம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்றபோதும் ஒரே நேரத்தில் இரண்டு நாடுகளையும் எதிா்த்து போரிட முடியாது என்று சிவசேனை கூறியுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT