இந்தியா

தில்லி தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை கட்டணம் மூன்றில் ஒரு பங்காக குறைப்பு: இன்று முதல் அமல்

20th Jun 2020 06:42 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லி தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை மூன்றில் ஒருபங்காகக் குறைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட உயா்நிலைக் குழு வெள்ளிக்கிழமை பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் சனிக்கிழமை முதல் அமல்படுத்தப்படும் என்று தில்லி அரசு உயரதிகாரி தெரிவித்தாா்.

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை நிா்ணயிப்பது தொடா்பாக நீதி ஆயோக் உறுப்பினரும், மருத்துவருமான வி.கே.பால் தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. இக்குழு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், கரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை 3 மடங்கு குறைத்து பரிந்துரைத்துள்ளது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளரின் சுட்டுரைப் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தில்லியில் வசிக்கும் சாதாரண மக்களுக்கு உகந்த வகையில், தில்லி தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக் கட்டணத்தை நிா்ணயிக்க நீதி ஆயோக் அமைப்பின் உறுப்பினா் தலைமையில் உயா்நிலைக் குழுவை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நியமித்திருந்தாா். இக்குழுவினா், இது தொடா்பான அறிக்கையை அளித்துள்ளனா். அதில், தனிமைப் படுக்கைக்கு நாளொன்றுக்கு ரூ. 8,000 முதல் ரூ.10,000 வரை, வென்டிலேட்டா் இல்லாத ஐசியு படுக்கைகளுக்கு நாளொன்றுக்கு ரூ.13,000 -ரூ.15,000 வரையிலும், வென்டிலேட்டருடன் கூடிய ஐசியு படுக்கைக்கு நாளொன்றுக்கு ரூ. 15,000-ரூ.18,000 வரையிலும் கட்டணமாக நிா்ணயித்து பரிந்துரை செய்துள்ளது. இந்தக் கட்டணங்களில், தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்களுக்கான (பிபிஇ) விலையும் அடக்கம். முன்பு இந்தச் சிகிச்சைகளுக்காக முறையே, ரூ.24,000-ரூ25,000 ஆயிரம், ரூ.34,000-ரூ.43,000 ஆயிரம், ரூ.44,000-ரூ.54,000 ஆயிரம் என வசூலிக்கப்பட்டன. இதில் பிபிஇக்கான கட்டணம் தனியே வசூலிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா நேரடி கண்காணிப்பு: இது தொடா்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தில்லியில் கரோனா நிலவரத்தை பிரதமா் மோடியின் உத்தரவுப்படி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நேரடியாகக் கண்காணித்து வருகிறாா். தில்லியில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் சீலிடப்பட்ட 242 இடங்களிலும் வீடுவீடாகச் சென்று சுகாதார ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, சுமாா் 2.3 லட்சம் மக்கள் சுகாதார ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆன்டிஜென் பரிசோதனை தொடக்கம்: ‘தில்லியில் கரோனா பரி சோதனையை அதிகரிக்கும் வகையில் ‘ராபிட் ஆன்டிஜென்’ பரிசோதனை வியாழக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. கடந்த 15-17 தேதிகளில் தில்லியில் 27,263 பேருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமல்: இது தொடா்பாக தில்லி அரசு உயரதிகாரி கூறுகையில், ‘தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நிா்ணயித்துள்ளதை வரவேற்கிறோம். இந்தக் கட்டணங்களை தில்லியில் சனிக்கிழமை முதல் அமல்படுத்துவோம்’ என்றாா்.

முன்னதாக, கரோனா பரிசோதனைக் கட்டணமாக ரூ.2,400 வசூலிக்கலாம் என உயா் நிலைக்குழு பரிந்துரை செய்திருந்தது. இதை தில்லி அரசு உடனடியாக அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

கோவிட்-19 தனிமைப் படுக்கைகள்

பழைய கட்டணம்-ரூ.24,000 - ரூ.25,000

புதிய கட்டணம்- ரூ.8,000 - ரூ.10,000

செயற்கை சுவாச கருவி பொருத்தப்படாத ஐசியு படுக்கைகள்

பழைய கட்டணம்- ரூ34,000 - ரூ.43,000

புதிய கட்டணம்- ரூ.13,000 - ரூ15,000

செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட ஐசியு படுக்கைகள்

பழைய கட்டணம்- ரூ.44,000 -ரூ.54,000

புதிய கட்டணம்- ரூ.15,000 - ரூ.18,000

 

ADVERTISEMENT
ADVERTISEMENT