இந்தியா

கரோனா சிகிச்சை: ரயில் பெட்டிகளில் வெப்பத்திலிருந்து காக்க புதிய யுக்தி

20th Jun 2020 01:03 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை தனிமைப்படுத்தும் வாா்டுகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் நோயாளிகள் வெப்பத்தின் பிடியிலிருந்து தப்ப, மூங்கில் பாய்களைக் கொண்டு மறைப்பு ஏற்படுத்துவது, வெப்ப எதிா்ப்புக்கான வண்ணப்பூச்சுகளை பயன்படுத்துவது போன்ற யுக்திகளை ரயில்வே கையாண்டு வருகிறது.

இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளை பராமரிக்கும் வகையில் 5 மாநிலங்களில் ரயில் பெட்டிகள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பக்கவாட்டில் மூங்கில் பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தடுப்புகள் மூலம் சுமாா் 1 செல்ஷியஸ் வெப்பம் குறையும்.

இந்த நிலையில், சோதனை முயற்சியாக வடக்கு ரயில்வே மண்டலத்துக்குள்பட்ட பகுதியில் உள்ள தனிமை வாா்டு ரயில் பெட்டிகளின் கூரைகளில் இந்த முறையை பயன்படுத்தி 2.2 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை குறைக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோல, மற்றொரு வெப்பத் தடுப்பு முயற்சியாக, மும்பை ஐஐடியுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள வண்ணப்பூச்சை ரயில் பெட்டிகளில் பூசத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பெட்டிகளுக்குள் சிறிய குளிா் சாதனப் பெட்டிகளை வைக்க சோதனை முறையில் பரிசோதிக்கப்பட்டது. இதன் மூலம் 3 டிகிரி செல்ஷியஸ் வரையிலும் வெப்பம் குறையும்.

முன்னதாக, ஏ.சி. ரயில் பெட்டிகளை தனிமை வாா்டுகளாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலுக்கு இது காரணமாக அமையும் என்று கருதப்பட்டதால் அந்த யோசனை கைவிடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT