இந்தியா

கல்வான் ஆற்றை திசை திருப்பிய சீனா: செயற்கைக் கோள் புகைப்படத்தில் தெரிந்தது

20th Jun 2020 06:01 PM

ADVERTISEMENT


இந்தியா - சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினரிடையேயான மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து கல்வான் ஆற்றின் போக்கை சீனா திசை திருப்பியிருப்பது செயற்கைக் கோள் புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

செயற்கைக் கோள் புகைப்படத்தின் மூலம், சீனா, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் பல மாறுதல்களை மேற்கொண்டிருப்பதும், பாதைகளை விரிவாக்கம் செய்திருப்பது, கல்வான் ஆற்றின் பாதையை திசை திருப்பி நிலப்பகுதியையே மாற்றி அமைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த புகைப்படத்தைப் பார்க்கும் போது, கல்வான் பள்ளத்தாக்கில் சீனா சாலைகளை அமைத்திருப்பதையும், நதியின் போக்கை மாற்றியிருப்பதையும் காண முடிகிறது என்று கலிஃபோர்னியாவின் மிடில்பர்ரி மையத்தின் சர்வதேச ஆய்வின், கிழக்கு ஆசிய லாபநோக்கற்ற திட்டத்தின் இயக்குநர் ஜெஃப்ரி லீவிஸ் கூறியிருப்பதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்.. லடாக் எல்லையில் மோதல்: உலகின் கவனத்தை திசைதிருப்பும் சீனா

ADVERTISEMENT

அவர் கூறியதாவது, எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் பல வாகனங்கள் நின்றுள்ளன. அதிகப்படியான வாகனங்கள் சீன எல்லைப் பகுதியில் தெரிகிறது. நான் எண்ணிப் பார்த்தேன், இந்திய தரப்பில் 30 - 40 இந்திய வாகனங்களும், சீன எல்லைப் பகுதியில் 100 வாகனங்கள் நிற்பதையும் காண முடிகிறது.

செயற்கைக் கோள் புகைப்படத்தில் ஏராளமான இயந்திரங்களும் மலைப் பகுதிகளிலும், கல்வான் ஆற்றுப் பகுதியிலும் காணப்படுகின்றன.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் திடீரென சீனப் படைகள் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவும் படைப்பலத்தை அதிகரித்தது. இதனால், இந்தியா - சீனா இடையே கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வந்த நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. கடந்த திங்கள்கிழமை இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததால், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT