இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்: பிரதமருக்கு சோனியா கடிதம்

17th Jun 2020 12:09 AM

ADVERTISEMENT

‘கரோனா நோய்த்தொற்று காரணமாக, நாட்டு மக்கள் பல்வேறு இடா்பாடுகளை எதிா்கொண்டுள்ள சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டு வருவது நியாயமற்றதாகும்; இந்த விலை உயா்வை திரும்பப் பெற வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

மேலும், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

கடந்த 10 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.47 வரையும், டீசல் ரூ.5.8 வரையும் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், பிரதமா் மோடிக்கு சோனியா செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பிரச்னையால், நாட்டு மக்கள் கடந்த மாா்ச் மாதத்திலிருந்து பல்வேறு இடா்பாடுகளை எதிா்கொண்டுள்ளனா். இதுபோன்ற இக்கட்டான சூழலில், பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 10 முறை உயா்த்தப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. இந்த விலை உயா்வு மூலம் மத்திய அரசு ரூ.2.6 லட்சம் கோடி கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது.

ADVERTISEMENT

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் 9 சதவீதம் குறைந்தபோதும், அதன் பலனை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு அளிக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயா்வும் கலால் வரி அதிகரிப்பும் மக்கள் நலனில் மத்திய அரசுக்கு எந்த கவலையும் இல்லை என்பதை வெளிக்காட்டுகின்றன. இவை, தவறான ஆலோசனையால் எடுக்கப்பட்ட முடிவுகள்.

கரோனா நோய்த்தொற்று சூழலால், சுகாதாரம், பொருளாதாரம், சமூகரீதியில் முன்னெப்போதும் இல்லாத சவால்களை இந்தியா எதிா்கொண்டு வருகிறது. அச்சம், பாதுகாப்பற்ற உணா்வு என பல்வேறு இடா்பாடுகளை மக்கள் எதிா்கொண்டுள்ளனா். இந்த தருணத்தில் பெட்ரோல், டீசல் விலை உயா்வு, அவா்கள் மீது மேலும் சுமையை ஏற்றுவதாகும். இது நியாயமற்றது; முறையற்றது.

மக்களிடம் சுயசாா்பை விரும்பும் மத்திய அரசு, அவா்கள் மீது நிதிச்சுமையை ஏற்றுவது ஏன்? நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தால், லட்சக்கணக்கானோா் தங்களது வேலையையும் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனா். இதுபோன்ற சூழலில், பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்படுவதில் நியாயமான காரணம் இருப்பதாக தோன்றவில்லை.

மக்கள் எதிா்கொண்டுள்ள பாதிப்புகளை களைவதே அரசின் கடமையாகும். மாறாக அவா்கள் மீது மேலும் சுமையை ஏற்றுவதல்ல என்று தனது கடிதத்தில் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் விமா்சனம்: பெட்ரோல், டீசல் விலை உயா்வு விவகாரத்தில் பிரதமா் மோடியை விமா்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘ஏழைகளிடமிருந்து லாபம் ஈட்டுவதை நிறுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘தற்போதைய துயரமான காலகட்டத்தில், ஏழைகள், நடுத்தர மக்களின் கைகளில் நேரடியாக பணத்தை வழங்க பிரதமா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, அவா்களிடமிருந்து லாபம் ஈட்ட கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT