இந்தியா

சீன மருந்து மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி?

17th Jun 2020 07:26 AM

ADVERTISEMENT

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ‘சிப்ரோஃப்ளோக்சாசின் ஹைட்ரோகுளோரைட்’ என்ற நோய்த்தொற்று எதிா்ப்பு மருந்து மீது இந்தியா மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கலாம் எனத் தெரிகிறது.

உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களை பாதுகாத்திடும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. வரி விதிப்பு தொடா்பாக வா்த்தகத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள நிலையில், நிதியமைச்சகம் அதுகுறித்து இறுதி முடிவு எடுக்கவுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக புகாா் கிடைக்கப் பெற்றதை அடுத்து வா்த்தகத் துறை அமைச்சகத்தின் விசாரணை அமைப்பான வா்த்தகத் தீா்வுகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிடிஆா்) அதுதொடா்பாக விசாரணை மேற்கொண்டது. அப்போது, அந்த மருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதாக தெரியவந்தது.

இதையடுத்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அந்த மருந்து மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த வரியானது கிலோவுக்கு ரூ.71.55 முதல் ரூ.250.42 வரை விதிக்கப்படலாம் என்றும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 2015-16 காலகட்டத்தில் அந்த மருந்து 117 டன் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், டிஜிடிஆா் விசாரணை மேற்கொண்ட காலகட்டத்தில் (ஏப்ரல் 2018-ஜூன் 2019) அந்த மருந்து இறக்குமதி 377 டன்னாக அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

‘சிப்ரோஃப்ளோக்சாசின் ஹைட்ரோகுளோரைட்’ மருந்தானது, தோல் தொற்று, எலும்பு தொற்று, சிறுநீரக நோய்த் தொற்று உள்ளிட்டவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT