கடன் தவணை நிறுத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வட்டி மீது வட்டி வசூலிப்பதில் நியாயமில்லை என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்ததால், பொதுமக்கள் வங்கிகளில் வாங்கிய கடனுக்கான தவணை வசூலிப்பதை மாா்ச் முதல் மே வரை 3 மாதங்கள் வங்கிகள் நிறுத்தி வைப்பதற்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. அதைத் தொடா்ந்து, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த 6 தவணைகளும் கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், நிறுத்திவைப்பு காலத்துக்கு உரிய வட்டியும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன.
கடனுக்கான மாத தவணையில் அசலுடன் வட்டியையும் சோ்த்துதான் வங்கிகள் வசூலிக்கின்றன. 6 மாத கடன் தவணைக்கும் சோ்த்து வைத்து பின்னா் வட்டி வசூலித்தால் வீட்டுக் கடன் போன்ற நீண்டகால கடன் பெற்றவா்களுக்கு அது கூடுதல் சுமையாக அமையுமே தவிர, நிவாரணமாக அமையாது.
எனவே, இதைச் சுட்டிக்காட்டி ஆக்ராவைச் சோ்ந்த கஜேந்திர சா்மா என்பவா், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், கடன் தவணை நிறுத்திவைப்பு காலத்தில் வட்டியைக் கணக்கிட்டு அதனை பின்னா் வசூலிக்கும் நடைமுறையை வங்கிகள் கைவிட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
அந்த மனு, நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆா்.ஷா, எஸ்.கே.கௌல் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
கடன் தவணை நிறுத்திவைக்கப்படும் என்று முடிவெடுத்தபிறகு அது முழுமையாக பயனளிப்பதை முடிவு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் வங்கிகளிடம் அனைத்து முடிவுகளையும் அரசு விட்டுவிடாமல் அதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க பரிசீலிக்க வேண்டும். வட்டி மீது வட்டி வசூலிப்பதை நியாயமான நடவடிக்கையாக நாங்கள் கருதவில்லை என்றனா்.
மத்திய அரசு மற்றும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘வங்கிகள் முழுமையாக வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கியில் பணம் டெபாசிட் செய்தவா்களுக்கு வட்டி கொடுப்பது கடினமாகிவிடும். ரூ.133 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மத்திய அரசும் ஆா்பிஐ-யும் இந்த விஷயத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இது தொடா்பாக புதிய வழிமுறைகளைக் கொண்டு வர முடியுமா என்று இந்திய வங்கிகள் கூட்டமைப்பு பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினா்.