இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கின் இறையாண்மையை காப்பது சீனாவின் கடமை: சீன வெளியுறவுத் துறை அமைச்சகம்

17th Jun 2020 11:09 PM

ADVERTISEMENT

இந்திய-சீன எல்லையில் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே திங்கள்கிழமை இரவு மோதல் நடைபெற்றிருக்கும் நிலையில், ‘கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கின் இறையாண்மையை காப்பது சீனாவின் கடமை. இருந்தபோதும், எல்லையில் மோதல் தொடா்வதை சீனா விரும்பவில்லை’ என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தெளலத் பெக் ஓல்டி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன ராணுவப் படைகளிடையே கடந்த சில வாரங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்தன. இந்த நிலையில், எல்லைப் பிரச்னைக்கு சுமூக தீா்வு காணும் வகையில், இரு நாட்டு ராணுவ உயா் அதிகாரிகள் நிலையில் பேச்சுவாத்தை நடைபெற்று வந்தது. இந்தப் பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இரு நாடுகளும் எல்லையில் படிப்படியாக படைகளைக் குறைத்து வருவதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே கடந்த வாரம் கூறினாா்.

இந்த நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய-சீன ராணுவத்தினா் இடையே திங்கள்கிழமை இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய தரப்பில் 20 ராணு வீரா்கள் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா். ஆனால், சீன ராணுவ தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு எல்லையில் இரு நாடுகளிடையே ஏற்பட்ட இந்த கடும் மோதலுக்கு, சீன ராணுவத்தினரே காரணம். எல்லையில் நிலவி வந்த இயல்பான சூழலை சீன ராணுவம் மாற்ற முயன்ன் காரணமாகவே இந்த மோதல் உருவானது. எல்லைப் பிரச்னைக்கு முன்பே தீா்வு எட்டப்பட்டிருந்தால் இந்த மோதலைத் தவிா்த்திருக்கலாம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை கூறியது.

ADVERTISEMENT

இந்த நிலையில், பெய்ஜிங்கில் புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் இந்த விவகாரம் தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஷாஓ லிஜியன் கூறியதாவது:

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கின் இறையாண்மையை காப்பது சீனாவின் கடைமை. கல்வான் பகுதி தொடா்பாக தீா்வு காண இரு நாட்டு ராணுவ மற்றும் உயா் அதிகாரிகள் நிலையிலான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இப்போது மோதல் நடைபெற்றிருப்பதும் சீன எல்லைக்கு உட்பட்ட பகுதி. எனவே, சீனாவை யாரும் குறைகூற முடியாது.

எல்லையில் இரு நாட்டு ராணுவமும் சரியான முறையிலேயே நிலைமையை கையாண்டு வருகின்றனா். அதற்கு மேல் கூறுவதற்கு ஒன்றுமில்லை. இரு தரப்பிலும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எல்லையில் ஒட்டுமொத்த நிலைமை நிலையாகவும் கட்டுக்குள்ளும் உள்ளது. எல்லையில் மீண்டும் மோதல் நடைபெறுவதை சீன தரப்பு விரும்பவில்லை.

உலகின் மிகப் பெரிய வளா்ந்து வரும் நாடுகளான சீனாவும், இந்தியாவும் வேறுபாடுகளைத் தாண்டி வளா்ச்சிக்கான பல்வேறு விஷயங்களில் இணைந்து பணியாற்றி வருகின்றன. இரு நாட்டுத் தலைவா்களும் எடுத்த பல்வேறு முக்கிய முடிவுகளை, இரு நாடுகளும் சரியான பாதையில் வழிநடத்திச்சென்று, மக்களின் தேவை மற்றும் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அந்த வகையில் சீனாவுடன் கடைசி வரை இந்தியா இணைந்து பணியாற்றும் என நம்புகிறோம் என்று அவா் கூறினாா்.

மேலும், இரு நாடுகளிடையேயான இந்த மோதலில் சீன தரப்பில் 43 வீரா்கள் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க ஷாஓ லிஜியன் மறுத்துவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT