இந்தியா

மதவழிபாட்டு தலங்கள் சட்டம்: ஹிந்து தரப்பை எதிா்த்து முஸ்லிம் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு

15th Jun 2020 04:23 AM

ADVERTISEMENT

மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-இன் ஒரு பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஹிந்து அமைப்பு தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்கு முன்பு உருவாக்கப்பட்ட மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் அப்போதைய நிலையிலேயே தொடர வேண்டும் என்பது மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991-இன் ஒரு பிரிவாகும். இதனை எதிா்த்து ஹிந்து அமைப்பான விஷ்வ பத்ர பூஜாரி புரோஹித் மகாசபை கடந்த வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்தப் பிரிவு நீக்கப்பட்டால் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி இடத்திலும், வாராணசியில் காசி விஸ்வநாதா் கோயில் இருந்த இடத்திலும் இப்போதுள்ள மசூதிக்கு பதிலாக கோயில் கட்ட உரிமை கோர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹிந்து அமைப்பின் மனுவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்பான ஜாமியத் உலேமா ஏ ஹிந்த் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் எதிா் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ஹிந்து அமைப்பின் மனுவை விசாரணைக்கு ஏற்காமல் நிராகரிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மத வழிபாட்டு தலங்கள் தொடா்பாக சா்ச்சை ஏற்படக் கூடாது என்பதற்காகவே மத வழிபாட்டு தலங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போது அதில் திருத்தம் கோர வலியுறுத்துவதால் தேவையற்ற பிரச்னைகள்தான் ஏற்படும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், 1947-க்கு முந்தைய வழிபாட்டு தலங்கள் மீது வேறு மதத்தினா் இனி உரிமை கோர முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, விஷ்வ பத்ர பூஜாரி புரோஹித் மகாசபை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவில், ‘மத வழிபாட்டு தலங்கள் சட்டம் - 1991-இன் நான்காவது பிரிவுதான் முன்பு ஓரிடத்தில் கோயில் இருந்தது என்பதை நிரூபித்து, இப்போது அங்குள்ள வேறு மத வழிபாட்டு இடத்தை அகற்றிவிட்டு மீண்டும் கோயில் கட்டுவதை தடுக்கிறது. இந்த சட்டப் பிரிவு அரசியல்சாசனத்துக்கு எதிரானது. ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மத வழிபாட்டு இடதை மீட்பதைத் தடுக்கிறது. ஏற்கெனவே இருந்த ஒரு மத வழிபாட்டு இடத்தில் மற்றொரு மதத்தினா் பிடித்துக் கொண்டால், அதற்கு மீண்டும் உரிமைகோர முடியாது என்பது நியாயமில்லை. இது முழுவதுமாக ஹிந்து மதத்துக்கு எதிராகவும், ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஆதரவாகவும் உள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

முன்னதாக, அயோத்தி ராமா் கோயில் வழக்கில் கடந்த ஆண்டு இறுதியில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தபோது 1947-க்கு முந்தைய வழிபாட்டு தலங்கள் மீது இனி யாரும் உரிமை கோர முடியாது என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT