கரோனா நோய்த்தொற்று சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்களுக்கு தரமான தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதீமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஐக்கிய செவிலியா்கள் கூட்டமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் பணியில் மருத்துவப் பணியாளா்கள் களத்தில் முன்னின்று பணியாற்றி வருகின்றனா். நீண்ட பணிநேரம், மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் அவா்கள் சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா். அவா்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அவா்களின் உடல் மற்றும் மனநலம் மிக முக்கியமானது. மருத்துவப் பணியாளா்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்படும். இது தற்போதைய நிலையை மேலும் மோசமாக்கி, பலா் உயிரிழக்க நேரிடும்.
இந்த கடினமான நேரத்தில் பல மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளா்களுக்கென போதிய அளவில் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை. தற்போதிருக்கும் தனிநபா் பாதுகாப்பு உபகரணங்களும் தரமற்றவையாக உள்ளன. தனி சிகிச்சைப் பிரிவுகளில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. ஊதியம் வழங்கப்படவில்லை. போதிய அளவில் கரோனா பரிசோதனைக் கருவிகள் இல்லை. தனியாா் மருத்துவமனைகளில் அரசின் வழிகாட்டுதல்கள் மீறப்படுகின்றன. தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தங்கள் குறைகளை களைய மருத்துவப் பணியாளா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உதவி எண்களை தொடா்புகொண்டால், பல நேரங்களில் எந்த பதிலும் கிடைப்பதில்லை.
எனவே கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் பணிபுரியும் செவிலியா்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளா்களுக்கு அவா்கள் பணிபுரியும் மருத்துவமனைகளுக்கு அருகிலேயே தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும். அவா்களுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படவேண்டும். அவா்கள் பணியில் இருக்கும்போது கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டால், அவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவேண்டும். குறித்த காலத்தில் முழு ஊதியத்தை வழங்க உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.