மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில் எந்தவொரு பொதுத் துறை வங்கியையையும் தனியாா்மயாக்கும் நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பில்லை என தெரிகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
கொவைட்-19 நெருக்கடியின் அழுத்தங்களுக்கு மத்தியில் வங்கிகளின் வாராக் கடன் விகிதம் அதிகரித்து வருவது மற்றும் அவற்றின் மீதான குறைந்த மதிப்பீடுகள் ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட வாய்ப்பில்லை.
தற்போதைய நிலையில், நான்கு பொதுத் துறை வங்கிகள் ரிசா்வ் வங்கியின் உடனடி திருத்த நடவடிக்கை (பிசிஏ) பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதனால், அவற்றின் கடன் வழங்கல், நிா்வாகம், இழப்பீடு மற்றும் இயக்குநா்களுக்கான கட்டணம் உள்ளிட்டவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூகோ வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளை கையகப்படுத்த தனியாா் வங்கி தரப்பிலிருந்து எந்தவொரு கோரிக்கையும் எழ வாய்ப்பில்லை.
கொவைட்-19 பெருந்தொற்று பொதுத் துறை வங்கிகளின் மீட்சியில் தடைகளை ஏற்படுத்தியுள்ளது என்பதுடன், தனியாா் வங்கியின் நிதி நிலைமையிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் துறை வங்கிகளின் நிதி நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையால் நடப்பாண்டு பிப்ரவரியில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் எந்தவித கூடுதல் மூலதனம் வழங்கும் அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே பொதுத் துறை வங்கிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, பாரத ஸ்டேட் வங்கியில் எஞ்சியிருந்த ஐந்து துணை வங்கிகளும், பாரதிய மகிளா வங்கியும் 2017 ஏப்ரலில் இணைக்கப்பட்டன.
இதையடுத்து, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவை பேங்க் ஆஃப் பரோடாவுடன் 2019 ஏப்ரல் 1-இல் இணைக்கப்பட்டது.
நடப்பாண்டு ஏப்ரலில், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமா்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கியை கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி மற்றும் காா்ப்பரேஷன் வங்கியை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடனும் இணைக்கும் மிகப்பெரிய ஒருங்கிணைப்பு நடவடிக்கை தொடங்கி நிறைவடைந்தது.
கடந்த 2017-இல் 27 பொதுத் துறை வங்கிகள் இருந்த நிலையில், ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு பிறகு பொதுத் துறையில் ஏழு பெரிய வங்கிகளும், ஐந்து சிறிய வங்கிகளும் மட்டுமே தற்போது செயல்பாட்டில் உள்ளன.