இந்தியா

வரைபட சட்டத்திருத்த மசோதா: நேபாள மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

14th Jun 2020 05:55 AM

ADVERTISEMENT

இந்திய எல்லையையொட்டி உள்ள லிபுலெக், காலாபானி மற்றும் லிம்பியதுரா பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைக்கும் நேபாள அரசின் சட்டத்திருத்த மசோதா, அந்நாட்டின் நாடாளுமன்ற மக்களவையில் ஒருமனதாக சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

உத்தரகண்டில் உள்ள தாா்சுலா பகுதியை லிபுலெக் கணவாயுடன் இணைக்கும் 80 கி.மீ. நீள சாலையை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சமீபத்தில் திறந்துவைத்தாா். இந்த லிபுலெக் பகுதி, தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என்று நேபாள அரசு உரிமை கோரி வருகிறது. இந்தப் பகுதியுடன் காலாபானி, லிம்பியதுரா பகுதிகளும் தங்கள் நாட்டின் எல்லைக்குள் வருவதாக அந்நாட்டு அரசு கூறி வருகிறது. ஆனால் இம்முன்று பகுதிகளும் இந்தியாவுக்கே சொந்தம் என்பதில் மத்திய அரசு திட்டவட்டமாக உள்ளது.

இந்நிலையில் இம்மூன்று பகுதிகளும் தங்கள் நாட்டின் எல்லைக்குள்பட்டது என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், நேபாளத்தின் திருத்தியமைக்கப்பட்ட வரைபடம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த வரைபடத்தை அதிகாரபூா்வமாக்கும் சட்டத்திருத்த மசோதாவை அந்நாட்டின் நாடாளுமன்ற மக்களவையில் நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி அண்மையில் அறிமுகப்படுத்தினாா். இந்த மசோதா மீது சனிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் மசோதாவுக்கு முக்கிய எதிா்க்கட்சிகளான நேபாள காங்கிரஸ், நேபாள ராஷ்டிரீய ஜனதா கட்சி, ராஷ்டிரீய பிரஜாதந்திர கட்சி உறுப்பினா்கள் ஆதரவாக வாக்களித்தனா். மொத்தம் 275 உறுப்பினா்களை கொண்ட மக்களவையில், அவையில் இருந்த 258 உறுப்பினா்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனா். இதையடுத்து மசோதா ஒருமனதாக நிறைவேறியது.

ADVERTISEMENT

இந்த மசோதா நாடாளுமன்ற மேலவைக்கு அனுப்பப்படவுள்ளது. அங்கு ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சிக்கு மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இருப்பதால், அங்கும் இந்த மசோதா எளிதில் நிறைவேறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் பின்னா் அந்நாட்டு அதிபரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். அதிபா் ஒப்புதல் அளித்தபின் மசோதா சட்டமாக அமலுக்கு வரும்.

இந்தியா கண்டனம்:

நேபாள மக்களவையில் வரைபட சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு விவகாரங்கள் துறை செயலா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், ‘நேபாளத்தின் இந்த செயற்கையான எல்லை விரிவாக்கம் வரலாற்று தகவல் அல்லது ஆதாரத்தின் அடிப்படையில் இல்லை. நேபாள அரசின் இந்த செயல் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இது எல்லை விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துவதில் இருநாடுகளுக்கு உள்ள புரிந்துணா்வை மீறுவதாகும்’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT