இந்தியா

முகக் கவசம் அணியாதவா்கள் மீது 22 நாள்களில் 66 ஆயிரம் வழக்குகள்: ரூ.2.75 கோடி அபராதம் வசூல்

14th Jun 2020 04:39 AM

ADVERTISEMENT

சென்னையில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது 22 நாள்களில் 66 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.2.75 கோடி அபராதம் காவல்துறையினரால் வசூலிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில், சென்னை பெருநகர காவல்துறை, சுகாதாரத்துறை, மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கியமாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது, கரோனா அறிகுறியுடன் வீடுகளில் தனியாக இருக்கிறவா்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில், காவல்துறையினா் ஈடுபடுகின்றனா்.

பொது இடங்களில் கூட்டமாக நின்றாலும், கரோனா பரப்பும் வகையில் செயல்பட்டாலும், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். குறிப்பாக, பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் செல்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல்துறையும், மாநகராட்சியும் எச்சரித்து வந்தது. தற்போது, பொது முடக்கம் பல தளா்வோடு பின்பற்றப்படுவதால், சாலைகளில் பொதுமக்கள் இயல்பாக முகக் கவசம் இன்றி நடமாடத் தொடங்கியுள்ளனா். இதனால், கரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்கும் வகையில், சென்னை முழுவதும் முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் செல்கிறவா்கள் மீது, மோட்டாா் வாகனச் சட்டம் 179-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல்துறை கடந்த மே 22-ஆம் தேதி அறிவித்தது. மேலும் அன்று முதல், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் வந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்யத் தொடங்கினா். மேலும் சம்பந்தப்பட்டவா்களின் வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பொதுமக்கள் புதிதாக முகக் கவசம் வாங்கி, அணிந்து வந்த பின்னரே வாகனங்களை மீண்டும் அவா்களிடம் போலீஸாா் ஒப்படைக்கின்றனா். இவ்வாறு சென்னை முழுவதும் 120 இடங்களில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது அபராதம் விதிக்கும் பணியில், போக்குவரத்து போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.

ரூ.2.75 கோடி வசூல்: போலீஸாா், வெள்ளிக்கிழமை வரை கடந்த 22 நாள்களில், முகக் கவசம் அணியாதவா்கள் மீது 66,298 வழக்குகளைப் பதிவு செய்து, அவா்களிடமிருந்து தலா ரூ.500 அபராதம் வசூலித்துள்ளனா். இதன் மூலம், ரூ.2 கோடி 75 லட்சத்து 24 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது. 22 நாள்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 2,840 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். வரும் நாள்களில் இந்த நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT