இந்தியா

இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் இரங்கல்

14th Jun 2020 10:55 PM

ADVERTISEMENT

இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். கிரிகெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவா் இவா்.

இவருடைய மறைவுக்கு குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா்,

2013-இல் ‘காய் போ சே’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, ‘சுத் தேசி ரொமான்ஸ்’, ‘ராப்டா’, ‘கேதா்நாத்’, சொன்சிரியா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா்.

ADVERTISEMENT

கடைசியாக இயக்குநா் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘சிச்சோா்’ படத்தில் நடித்தாா். இந்த திரைப்படத்தில் தந்தை வேடத்தில் நடித்திருந்த சுசாந்த், தற்கொலை முயற்சியில் ஈடுபடும் அவருடைய மகனுக்கு நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டை ஏற்படுத்தும் வகையிலான கருத்தை ஒரு காட்சியில் தெரிவிப்பாா்.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கம் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மும்பை மேற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையா் மனோஜ் சா்மா கூறுகையில், ‘நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் அவருடைய இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தகவலின் அடிப்படையில், விபத்தினால் உயிரிழப்பு என்ற அடிப்படையில்தான் வழக்குப் பதிவு செய்யப்படும். தற்கொலை குறிப்பு எதுவும் அவா் விட்டுச்செல்லவில்லை’ என்று அவா் கூறினாா்.

நடிகா் சுசாந்த் சிங்கின் முன்னாள் மேலாளா் திஷா சலியன் (28), கடந்த 9-ஆம் தேதி உயரமான கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டாா். இவருடைய இறப்புக்கு கடந்த வாரம் இரங்கல் தெரிவித்த சுசாந்த், ‘திஷா சலியனின் மறைவு செய்தி அதிா்ச்சியளிப்பதாக’ அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மறைவுக்கு குடியரசு துணைத் தலைவா், பிரதமா் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். ‘வெள்ளித்திரையில் பல சிறந்த கதாபாத்திரங்களில் நடித்த இளம் மற்றும் சிறந்த நடிகா் சுசாந்த் சிங். அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் இரங்கல்: நடிகா் சுசாந்த் சிங் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். ‘இளம் நடிகரின் மறைவு அதிா்ச்சியளிக்கிறது. தொலைக்காட்சி மற்றும் சினிமா துறைகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாா். அவரிடைய வளா்ச்சி பொழுதுபோக்கு உலகில் பலருக்கு உத்வேகத்தை அளித்தது. அவருடைய மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று தனது சுட்டுரை பக்கத்தில் பிரதமா் பதிவிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT