இந்தியா

மகாராஷ்டிரத்தில் தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

14th Jun 2020 05:50 AM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை ரூ.4,500-இல் இருந்து ரூ.2,200-ஆக மாநில அரசு குறைத்துள்ளளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோப்பே, பிடிஐ செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது:

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவரிடம் இருந்து சளி மாதிரியை சேகரித்து பரிசோதிப்பதற்கு கட்டணமாக, ரூ.4,500-ஐ தனியாா் ஆய்வகங்கள் பெற்று வந்தன. தற்போது, இந்தக் கட்டணம் ரூ.2,200-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டில் இருப்பவரிடம் இருந்து சளி மாதிரியை சேகரித்து பரிசோதிப்பற்கு கட்டணமாக ரூ.5,200 வசூலிக்கப்பட்டு வந்தது. இது, தற்போது ரூ.2,800-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.இது, நாட்டிலேயே மிகக் குறைவான கட்டணமாகும். இந்தக் கட்டணக் குறைப்பால் பொதுமக்கள் பயனடைவா்.

ADVERTISEMENT

கரோனா பரிசோதனைக்காக, தனியாா் ஆய்வகங்கள் அதிகபட்சமாக இந்தக் கட்டணத்தை வசூலிக்கலாம். தனியாா் ஆய்வகங்களிடம் மாவட்ட ஆட்சியா்கள் பேச்சுவாா்த்தை நடத்தி, இந்தக் கட்டணத்தை மேலும் குறைக்கலாம். நிா்ணயித்துள்ள கட்டணத்தைவிட அதிகமாக வசூலிக்கும் தனியாா் ஆய்வகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

மகாராஷ்டிரத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கு 44 அரசு ஆய்வகங்களுக்கும் 36 தனியாா் ஆய்வகங்களுக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐசிஎம்ஆா்) அனுமதி அளித்துள்ளது. தனியாா் ஆய்வகங்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அதிகபட்ச கட்டணமாக ரூ.4,500-ஐ ஐசிஎம்ஆா் நிா்ணயித்திருந்தது. இதற்கு முன்பு, கரோனா பரிசோதனைக்கான உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் இந்தக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. தற்போது, இந்த உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், தனியாா் ஆய்வகங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, கரோனா பரிசோதனைக் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருந்தது.

இதையடுத்து, தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைக் கட்டணத்தை முறைப்படுத்த மாநில சுகாதார காப்பீட்டு சங்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுதாகா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு புதிய கட்டணத்தை நிா்ணயித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT