இந்தியா

தில்லியில் கரோனா பரிசோதனை இரட்டிப்பாக்கப்படும்: அமித் ஷா

14th Jun 2020 04:53 PM

ADVERTISEMENT


தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய உள்துறை அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

தில்லியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு, தில்லியில் கரோனா பரிசோதனை இரட்டிப்பாக்கப்படும் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி அடுத்தடுத்த சுட்டுரைப் பதிவுகளில் அமித் ஷா தெரிவித்திருப்பதாவது:

ADVERTISEMENT

“தில்லியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அடுத்த இரண்டு நாள்களில் கரோனா பரிசோதனை இரட்டிப்பாக்கப்படும். 6 நாள்களுக்குப் பிறகு கரோனா பரிசோதனை மூன்று மடங்காக அதிகரிக்கப்படும். மேலும் சில நாள்களுக்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு மையங்களிலும் பரிசோதனை தொடங்கப்படும்.

தில்லி மக்களைப் பாதுகாக்க சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், தில்லி துணைநிலை ஆளுநர், முதல்வர் கேஜரிவால் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோர் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார்கள். 

தில்லிக்கு உடனடியாக 500 ரயில் பெட்டிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 8,000 படுக்கை வசதிகள் கிடைப்பது மட்டுமில்லாமல், கரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான அனைத்து வசதிகளும் இந்த ரயில் பெட்டிகளில் உள்ளன.

வீடு வீடாக மருத்துவப் பரிசோதனை செய்து, ஒரு வாரத்தில் அது பற்றிய அறிக்கை வெளியிடப்படும்.

தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் 60 சதவீத படுக்கை வசதிகளில் குறைந்த விலையில் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள இந்த குழு வழி ஏற்படுத்தும். திங்களன்று இந்தக் குழு அறிக்கை சமர்பிக்கிறது.

இன்றையக் கூட்டத்தில் இதுபோன்ற முக்கிய முடிவுகளுக்கு அப்பாற்பட்டு, மற்ற பல முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.”

இந்தக் கூட்டத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்,வென்டிலேட்டர்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக தில்லி அரசுக்கு அமித் ஷா உறுதியளித்துள்ளார். கரோனாவை எதிர்கொள்ள தில்லி அரசுக்கு மேலும் 5 மூத்த அதிகாரிகளை நியமிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் கடைசி நிலை வரை சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மத்திய மற்றும் தில்லி அரசுகளின் சுகாதாரத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட மற்ற துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா, 3 நகராட்சி ஆணையர்கள் மற்றும் மத்திய உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தில்லியில் தற்போதைய நிலவரப்படி இதுவரை 38,958 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,271 பேர் பலியாகியுள்ளனர்.

Tags : Delhi Kejriwal Amit Shah coronavirus corona Corona Virus covid 19 Delhi Corona 500 coaches கரோனா கரோனா வைரஸ் கரோனா தொற்று கரோனா பாதிப்பு தில்லி கரோனா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT