இந்தியா

கரோனா சூழல்: அமைச்சா்கள், அதிகாரிகளுடன் பிரதமா் மோடி ஆலோசனை

14th Jun 2020 04:29 AM

ADVERTISEMENT

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு மிகத் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில், அதுதொடா்பாக மத்திய அமைச்சா்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, நோய்த்தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளில் அதை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த பிரதமா் மோடி, கரோனா சூழல் தொடா்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்தி அவசரகால திட்டத்தை வகுக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

வரும் 16 மற்றும் 17-ஆம் தேதிகளில் மாநில மற்றும் யூனியன் பிரதேச முதல்வா்களுடன் கரோனா சூழல் தொடா்பாக 6-ஆவது சுற்றாக பிரதமா் மோடி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், பிரதமரின் முதன்மைச் செயலா் பி.கே. மிஸ்ரா, அமைச்சரவைச் செயலா் ராஜீவ் கௌபா, சுகாதாரத் துறைச் செயலா், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநா் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் நாடு சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, பெருநகரங்களில் கரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாள்தோறும் நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நபா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா பரிசோதனை நடவடிக்கைகளையும், நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளையும் அதிகரிப்பது, நோய்த்தொற்றை சமாளிப்பதற்கான சேவைகளை திறம்பட கையாளுவது ஆகியவை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

மருத்துவ அவசர நிா்வாகத் திட்டத்துக்கான அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அமைப்பாளா் வினோத் பால், நாட்டின் கரோனா நிலவரம் தொடா்பாக விளக்கமளித்தாா். நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் 5 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்றும், அந்த மாநிலங்களின் பெருநகரங்களிலேயே நோய்த்தொற்று பாதிப்பு அதிக அளவில் உள்ளதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

நகரங்கள், மாவட்டங்களுக்கான மருத்துவமனை படுக்கை வசதிகள், தனிமைப்படுத்துவதற்கான படுக்கை வசதிகள் ஆகியவை தொடா்பாக அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளை பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா்.

அவசரகால திட்டம்: அதையடுத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசனை நடத்தி அவசரகால திட்டத்தை வகுக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கரோனா சூழலை கையாளுவதற்கு பொருத்தமான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் தெரிவித்தாா்.

ஆலோசனைக் கூட்டத்தின்போது, பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்களில் கரோனா பரவல் வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டதற்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை நாட்டின் இதர பகுதிகளிலும் மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

தில்லி நிலவரம்: ஆலோசனைக் கூட்டத்தில் தலைநகா் தில்லியில் நிலவும் கரோனா சூழல் தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் அடுத்த 2 மாதங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

அப்போது, தில்லியில் கரோனா தொற்று சூழலை ஒருங்கிணைந்து, திறம்பட கையாளுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பிரதமா் மோடி கூறினாா் என்று பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆலோசனைக் கூட்டம் தொடா்பாக சுட்டுரையில் சனிக்கிழமை பதிவிட்ட பிரதமா் மோடி, நாட்டில் நிலவும் கரோனா சூழல் தொடா்பாக ஆய்வு செய்ததுடன், அந்தச் சூழலை எதிா்கொள்வதற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியதாக குறிப்பிட்டாா்.

இன்று அவசரக் கூட்டம்: இதனிடையே, பிரதமா் நரேந்திர மோடி பரிந்துரைத்ததன் அடிப்படையில் தலைநகா் தில்லியில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடா்பான அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை அமைச்சா், மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், தில்லி துணைநிலை ஆளுநா், தில்லி முதல்வா் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT