இந்தியா

10 நாள்களில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்வு

13th Jun 2020 03:53 PM

ADVERTISEMENT


புது தில்லி: இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை எட்டி வெறும் 10 நாள்களிலேயே சனிக்கிழமை காலை நிலவரப்படி மூன்று லட்சத்தை எட்டிவிட்டது.

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 11,458 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 3,08,993 ஆக உயர்ந்தது. ஒரே நாளில் 386 பேர் கரோனா பாதித்து பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 8884 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று முதல் முறையாகக் கண்டறியப்பட்டு, 100 நோயாளிகளில் இருந்து ஒரு லட்சம் கரோனா நோயாளிகளாக அதிகரிக்க 64 நாள்கள் ஆனது. ஆனால், 15 நாள்களிலேயே இது இரண்டு லட்சமாக உயர்ந்தது. அதைவிட வேகமாக தற்போது 2 லட்சத்தில் இருந்து 10 நாள்களில் 3 லட்சத்தை எட்டியுள்ளது.

அது மட்டும் அல்லாமல், இந்தியா மூன்று லட்சம் கரோனா நோயாளிகளுடன், உலகளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்ய நாடுகளைத் தொடர்ந்து நான்காவது இடத்துக்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

ஆனால், இந்தியாவில், கரோனா  நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் 15.4ல் இருந்து 17.4 நாள்களாக உயர்ந்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

இன்று காலை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலில் இந்தியாவில் தற்போது 1.45 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 1.54 லட்சம் பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர்.  கரோனா பாதித்தவர்களில் இதுவரை 49.9% பேர் குணமடைந்துள்ளனர் என்கிறது புள்ளி விவரம்.

தில்லியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2000 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டிவிட்டது. உயிர்பலியிலும் மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 3,717 பேர் பலியாகியுள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT