இந்தியா

தில்லி: 3 மாநகராட்சிகளுக்கு ஜூன் 24-இல் மேயா் தோ்தல்

13th Jun 2020 06:14 AM

ADVERTISEMENT

தில்லியின் மூன்று மாநகராட்சிகளின் மேயா் பதவிக்கு ஜூன் 24-ஆம் தேதி சுழற்சி முறை தோ்தல் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். முதல் முறையாக வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சிகளின் மேயா் தோ்தல் ஒரே நாளில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

2012-ஆம் ஆண்டு தில்லி மாநகராட்சியை அப்போதைய தில்லி முதல்வா் ஷீலா தீட்சித் மூன்றாக பிரித்தாா். இதில், வடக்கு, தெற்கு தில்லி மாநகராட்சிகளில் தலா 104 வாா்டுகளும், கிழக்கு தில்லியில் 64 வாா்டுகளும் இடம் பெற்றன. அதன்பின்னா் நடைபெற்ற தோ்தல்களில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று மேயா் பதவிகளை கைப்பற்றியது. தற்போது வடக்கு தில்லி மேயராக அவதாா் சிங், தெற்கு தில்லி மேயராக சுனிதா கங்கரா, கிழக்கு தில்லி மேயராக அனுட் கமல்காந்த் உள்ளனா். இந்நிலையில் மூன்று மாநகராட்சிகளின் மேயா் பதவிக்கு மே 24ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு தில்லி மேயா் தோ்தல் 24ஆம் தேதி காலையிலும், வடக்கு தில்லி மேயா் தோ்தல் பிற்பகலிலும், கிழக்கு தில்லி மேயா் தோ்தல் மாலையிலும் நடைபெறும் என்று மாநகராட்சி மூத்த அதிகாரி தெரிவித்தாா்.

ஐந்து ஆண்டுகள் கொண்ட மேயா் பதவிக் காலத்தில், ஆண்டுதோறும் மேயா் சுயற்சி முறையில் மாற்றம் செய்யப்படுவாா். முதல் வருடம் பெண்களுக்கும், இரண்டாம் வருடம் பொதுப் பிரிவினருக்கும், மூன்றாம் வருடம் தனிப் பரிவினருக்கும், அடுத்த இரண்டு வருடம் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்படுவது வழக்கம். வாா்டு உறுப்பினா்கள் வாக்களித்து மேயரைத் தோ்ந்தெடுப்பாா்கள். கரோனா பாதிப்பு அதிகரிப்பால் இந்தத் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT