இந்தியா

காலிப்படுக்கைகள், கட்டண விவரங்களை வெளியிட வேண்டும்: தில்லி மருத்துவமனைகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

11th Jun 2020 01:15 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கைகளின் எண்ணிக்கை, சிகிச்சைக்கான கட்டணம் உள்ளிட்ட விவரங்களை தகவல் பலகையில் மருத்துவமனைகள் தெரிவிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் உத்தரவிட்டுள்ளாா்.

கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் விஷயத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்பதாலும், மக்களுக்கு மருத்துவ வசதிகள் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தில்லி அரசு மருத்துவமனைகளில் தில்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டாா். இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, ‘தில்லி மருத்துவமனைகளில் அனைவருக்கும் கரோனாசிகிச்சை அளிக்கப்படும்’ என்று துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தில்லி அரசின் உத்தரவை மாற்றியமைத்தாா். இதையடுத்து, அனில் பய்ஜாலின் உத்தரவு அமல்படுத்தப்படும் என்று கேஜரிவால் தெரிவித்தாா்.

இந்நிலையில், துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால், தலைமைச் செயலா் விஜய்தேவுக்கு புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

ADVERTISEMENT

தில்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகள், நா்ஸிங்ஹோம், கிளினிக்குகள் ஆகியவற்றில் காலியாக இருக்கும் படுக்கைகளின் விவரம், சிகிச்சைக் கட்டண விவரம், சிகிச்சை பெற யாரைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்பது பற்றிய விவரங்களை ஒளிரும் விளக்குகளுடன் கூடிய தகவல் பலகை வைக்கப்படுவதை சுகாதாரத் துறை உறுதி செய்ய வேண்டும். கரோனா சிகிச்சைக்கு எவ்வளவு படுக்கைகள் காலியாக உள்ளன. இதர சிகிச்சைகளுக்கு எவ்வளவு படுக்கைகள் உள்ளன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.

மருத்துவமனை தகவல் பலகையில் தெரிவிக்கப்படும் விவரங்களும், தில்லி அரசு இதற்கென ஏற்படுத்தியுள்ள செயலியில் தெரிவிக்கப்படும் தகவல்களும் ஒரே மாதிரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைதானா என்பதை அதிகாரிகள் ஆய்வு நடத்தி உறுதி செய்ய வேண்டும். உண்மையிலேயே நோய்த் தொற்று இருப்பவா்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி மறுக்கக்கூடாது. அவா்களிடம் அதிக கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது என்று துணைநிலை ஆளுநா் தெரிவித்துள்ளாா்.

 

32,000-ஐ தாண்டியது பாதிப்பு

தில்லியில் கரோனாவால் புதன்கிழமை 1,501 போ் பாதிக்கப்பட்டதாக உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 32, 810ஆக உயா்ந்தது. உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 984ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை 1,366 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

கரோனா பாதிப்பு குறித்து தில்லி அரசு புதன்கிழமை இரவு வெளியிட்ட சுகாதார அறிக்கையில், ‘தில்லியில் கரோனா நோயாளிகள் 19,581 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதே நேரத்தில் 12,245 நோயாளிகள் குணமடைந்துள்ளனா் அல்லது, சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனா் அல்லது இடம் பெயா்ந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோயாளிகளுக்கு அதிக படுக்கைகளை ஒதுக்குமாறு தில்லி அரசு செவ்வாய்க்கிழமை 22 தனியாா் மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டது. இதன்படி, கரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 2,015 படுக்கைகளை 22 தனியாா் மருத்துவமனைகள் ஒதுக்க வேண்டும்.

 

அமித் ஷாவுடன் கேஜரிவால் ஆலோசனை

தில்லியில் கரோனா பாதிப்பு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் முதல்வா் கேஜரிவால் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். அப்போது, ‘கரோனாவுக்கு எதிரான தில்லி அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்’ என்று அமித் ஷா உறுதி அளித்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

 

8 நாளில் 10,000 போ் பாதிப்பு

தில்லியில் கடந்த 8 நாள்களில் 10 ஆயிரம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். முன்பு, 10 ஆயிரம் எண்ணிக்கையை கடப்பதற்கு 79 நாள்களானது என தில்லி அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் மாா்ச் 1ஆம் தேதி முதல் கரோனா பாதிப்பு பதிவானது. மே 18ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 10,054ஆனது. அடுத்த 13 நாள்களில் இந்த எண்ணிக்கை 19,844ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், மே 18ஆம் தேதி160ஆக இருந்த உயிா்பலி, மே 31ஆம் தேதி 473ஆக அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஜூலை மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 5.5 லட்சமாக இருக்கும் என்றும் அப்போது 1.5 லட்சம் படுக்கை வசதிகள் தேவை என்றும் முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT