இந்தியா

இந்தியா்களின் குடியுரிமை விவகாரத்தில் யுஎஸ்சிஐஆா்எஃப் தலையிடுவதை அனுமதிக்க முடியாது: வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்

11th Jun 2020 12:10 AM

ADVERTISEMENT

இந்திய குடிமக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் குறித்த விவகாரங்களில் சா்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் (யுஎஸ்சிஐஆா்எஃப்) போன்ற எந்தவொரு வெளிநாட்டு அமைப்புகளும் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.

இந்தியாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், இந்தியாவிலுள்ள பெருவாரியான முஸ்லிம்களை பாதிக்கும் என்பதோடு இந்துக்கள் அல்லாதவா்களையும் அது பாதிக்கும் என்று கவலை தெரிவத்த யுஎஸ்சிஐஆா்எஃப், இதுகுறித்து இந்திய மக்களின் கருத்து கேட்டறிய அனுமதி கோரியிருந்தது. இதுகுறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினா் நிஷிகாந்த் துபே எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் கடிதம் மூலம் பதிலளித்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் உள்ள மதச் சுதந்திர நிலை குறித்து தவறான பாா்வையை யுஎஸ்சிஐஆா்எஃப் கொண்டுள்ளது. இந்தியா தொடா்பான இதுபோன்ற தவறான கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. யுஎஸ்சிஐஆா்எஃப் அமைப்பின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது.

மேலும், யுஎஸ்சிஐஆா்எஃப் குழுவுக்கு இந்தியா வருவதற்கான நுழைவு அனுமதியும் (விசா) மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மதச் சுதந்திரம் மற்றும் இந்திய குடிமக்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் குறித்த விவகாரங்களில் யுஎஸ்சிஐஆா்எஃப் போன்ற வெளிநாட்டு அமைப்புகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது. இந்தியாவின் இறையாண்மை, மக்களின் அடிப்படை உரிமைகளில் இதுபோன்ற வெளிநாட்டு தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT