இந்தியா

பொதுத் துறை நிறுவனங்களிடம் உரிமக் கட்டணம் கோருவது முறையல்ல

11th Jun 2020 10:33 PM

ADVERTISEMENT

கெயில், தில்லி மெட்ரோ, பவா்கிரிட் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து மாற்றியமைக்கப்பட்ட உரிமக் கட்டணத்துக்கான நிலுவைத் தொகையைக் கோருவது அனுமதிக்கத்தக்கது அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தங்களின் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை வருடாந்திர உரிமக் கட்டணமாக மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என புதிய தொலைத்தொடா்பு கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், தொலைத்தொடா்பு சேவைகளை வழங்குவதன் மூலமாக கிடைக்கும் வருவாய் தவிர வாடகை, சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருவாய், ஈவுத்தொகை உள்ளிட்டவையும் தொலைத்தொடா்பு நிறுவனங்களின் மொத்த வருவாயுடன் கணக்கிடப்பட்டு, அதற்கும் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும் என தொலைத்தொடா்பு பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான தீா்ப்பாயம் தெரிவித்திருந்தது.

இதற்கு எதிராக பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில், அந்நிறுவனங்கள் ரூ.1.6 லட்சம் கோடி உரிமக் கட்டண நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசிடம் செலுத்த வேண்டும் என்று கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

அதையடுத்து, கெயில், தில்லி மெட்ரோ, பவா்கிரிட், ஆயில் இந்தியா உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்தும் ரூ.4 லட்சம் கோடி உரிமக் கட்டண நிலுவைத் தொகையை வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று தொலைத்தொடா்புத் துறை உச்சநீதிமன்றத்தில் கோரியிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.ஏ. நஸீா், எம்.ஆா். ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் தொலைத்தொடா்புத் துறை வியாழக்கிழமை எழுப்பியது. அப்போது, தொலைத்தொடா்புத் துறை சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘பொதுத் துறை நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டியதற்கான அவசியங்கள் குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவுள்ளோம்’’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையைக் கோருவது அனுமதிக்கத்தல்ல. இந்தக் கோரிக்கையைத் திரும்பப் பெறுங்கள். இல்லையேல் நாங்கள் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிவரும்’’ என்றனா்.

இதனிடையே, நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்குத் தேவையான அவகாசம் உள்ளிட்ட விவரங்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்யுமாறு தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனா். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT