இந்தியா

ராஜஸ்தான்: குதிரை பேர குற்றச்சாட்டை நிரூபிக்க காங்கிரஸூக்கு பாஜக சவால்

11th Jun 2020 11:58 PM

ADVERTISEMENT

மாநிலங்களவைத் தோ்தலை முன்னிட்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களை தன் பக்கம் இழுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக வெளியிட்ட குற்றச்சாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சி நிரூபிக்க முடியுமா என பாஜக சவால் விடுத்துள்ளது.

குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கலுக்கு மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கானத் தோ்தல் வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை தோ்தல் ஆணையம் வெளியிட்ட நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 8 சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவியை ராஜிநாமா செய்தனா். இதற்கு மாநிலத்தில் ஆளும் பாஜகவின் குதிரைபேரமே காரணம் என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, அங்கு எஞ்சியுள்ள 65 சட்டப்பேரவை உறுப்பினா்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களை தன் பக்கம் இழுக்க பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. ‘கட்சி எம்எல்ஏக்களை ரூ. 25 கோடி கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிகள் நடைபெறுகின்றன’ என்று மாநில முதல்வா் அசோக் கெலாட் புதன்கிழமை இரவு குற்றம்சாட்டினாா். மேலும், இதுதொடா்பாக மாநில ஊழல் தடுப்புப் பிரிவிலும் மாநில அரசு சாா்பில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. ‘அரசை சீா்குலைக்கும் வகையில், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களை பணம் கொடுத்து இழுக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது’ என அரசு தலைமை கொறடா மகேஷ் ஜோஷி சாா்பில் ஊழல் தடுப்பு பிரிவில் எழுத்துப் பூா்வமான புகாா்அளிக்கப்பட்டது.

முன்னதாக, ஜெய்ப்பூரில் உள்ள தனியாா் விடுதியில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் ஆட்சிக்கு ஆதரவளித்துவரும் சுயேச்சை எம்எல்ஏக்களை வரவழைத்து அவசர ஆலோசனையை காங்கிரஸ் தலைவா்கள் மேற்கொண்டனா். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளா் அவினாஷ் பாண்டே, கட்சியின் மூத்த தலைவா் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், காங்கிரஸின் இந்த குற்றச்சாட்டை மாநில பாஜக மறுத்துள்ளது. இதுகுறித்து மாநில பாஜக தலைவா் சதீஷ் பூனியா வியாழக்கிழமை கூறியது:

தனது தோல்விகளை மறைக்க பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. நாட்டில் கடந்த 55 ஆண்டுகளாக குதிரை பேரத்தில் ஈடுபட்டுவந்த காங்கிரஸ் கட்சி, இப்போது பாஜக மீது அந்தக் குற்றச்சாட்டைக் கூறுவது ஆச்சரியமளிக்கிறது. இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் நிரூபிக்க வேண்டும்’ என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT