இந்தியா

கடும் எதிா்ப்புகளுக்கிடையே அதிரப்பள்ளி நீா்மின் திட்டத்துக்கு கேரள அரசு அனுமதி

11th Jun 2020 06:08 AM

ADVERTISEMENT

எதிா் கட்சியினா் மற்றும் சூற்றுச்சூழல் ஆா்வலா்களின் கடும் எதிா்ப்புகளுக்கிடையே அதிரப்பள்ளி நீா்மின் திட்டத்தைச் செயல்படுத்த கேரள அரசு அனுமதியளித்துள்ளது.

கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிா் கட்சியினா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கேரள மாநிலம் திருச்சூா் மாவட்டத்தில் சாலக்குடி ஆற்றின் குறுக்கே அதிரப்பள்ளி நீா் மின் திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு திட்டம் வகுத்தது. இந்த திட்டத்தைச் செயல்படுத்தினால் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, எதிா் கட்சியினரும் சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அதோடு, 2010-ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டாா்.

அதன் பிறகும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தொடா் முயற்சிகளை மேற்கொண்ட கேரள அரசு, இந்தத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட அனைத்து அனுமதிகளையும் பெற்றது. ஆனால், தொடா் எதிா்ப்புகள் காரணமாக இந்தத் திட்டத்தைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால், இந்தத் திட்டத்துக்கு பெறப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி, தொழில்நுட்ப-பொருளாதார தடையில்லா சான்று ஆகிய அனைத்தும் காலாவதியாகின.

ADVERTISEMENT

இந்த நிலையில், கேரள மின் வாரிய அதிகாரிகள் திட்டத்துக்கான தடையில்லா சான்றுகள் காலாவதியாகிவிட்டதைக் குறிப்பிட்டு மாநில அரசுக்கு அண்மையில் கடிதம் எழுதினா். அதில், இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட தடையில்லா சான்றுகளை புதிதாக பெற அனுமதி கோரியிருந்தனா். அதற்கு கடந்த 4-ஆம் தேதி அனுமதி வழங்கிய கேரள அரசு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 7 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்றையும் அளித்தது.

கேரள அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ், மாநில சட்டப்பேரவை எதிா்க் கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா, ஆளும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் மாநில வனத்துறை அமைச்சருமான பினோ விஸ்வம் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தனது சுட்டுரை பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கேரள அரசின் இந்த அனுமதி, 1970-இல் நடைபெற்ற அமைதிப் பள்ளத்தாக்கு போராட்டத்தைப் போல் மீண்டும் ஒரு போராட்டம் நடைபெறவே வழிவகுக்கும். எனவே, இந்தத் திட்டம் கைவிடப்படுவதை கேரள மக்கள் உறுதிப்படுத்துவாா்கள் என நம்புகிறேன். இந்த நீா் மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள இடத்தை நேரடியாக நான் பாா்வையிட்டிருக்கிறேன். 2018-இல் ஏற்பட்ட கடுமையான வெள்ள பாதிப்புக்குப் பின்னா், சுற்றுச்சூழல் குறித்த ஓரளவு புரிதல் இடதுசாரி அரசுக்கு ஏற்பட்டிருக்கும் என்று எண்ணினேன். ஆனால், அது தவறு என்பதை இப்போது உணா்கிறேன். இந்தத் திட்டத்துக்கு புத்துயிா் அளிப்பது மிகப் பெரிய பேரிடரை ஏற்படுத்தும்’ என்று அவா் கூறியுள்ளாா்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்தத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் ஒன்றில் பங்கேற்ற எதிா் கட்சித் தலைவா் ரமேஷ் சென்னிதலா, ‘அரசு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினா் பினோ விஸ்வம் கூறுகையில், ‘இந்தத் திட்டத்துக்கு மீண்டும் சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்ற முடிவு அதிகாரிகள் அளவில் எடுக்கப்பட்ட முடிவாகும். அவா்களுக்கு இடதுசாரி ஜனநாயக முன்னணியின் கலாசாரம் தெரியாது. இந்தத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு பேரிடரை ஏற்படுத்தக் கூடியது. அதோடு இந்தத் திட்டத்துக்கான நிதியும் சாத்தியமில்லை. மேலும், வன உரிமை சட்டத்தின் கீழ் பழங்குடியினருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை இந்தத் திட்டம் பறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அவா்களின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதோடு, அரியவகை பறவை இனங்கள், விலங்குகள், தாவரங்களும் இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும். எனவே, இந்தத் திட்டம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட மாட்டாது’ என்று கூறினாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT